UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 10:44 PM

கலபுரகி: ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் பா.ஜ., அரசியல் செய்கிறது,’’ என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
நம் நாட்டு மக்கள், மத்திய அரசின் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர். மத்திய பா.ஜ., கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலக உள்ளன. பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்டு உள்ளார்.
பிரதமர் மோடி, ஹிட்லர் போல செயல்படுகிறார். அவர் தவறான வகையில் இளைஞர்களை வழிநடத்துகிறார். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
முன்னர் நேரு, இந்திராவை விமர்சித்த சிலர், தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை விமர்சிப்பதையே முழு நேர பணியாக கொண்டு உள்ளனர். அவர்களுக்கு வேறு வேலையே இல்லை என நினைக்கிறேன்.
பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அனுப்பும் கடிதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சி தலைவர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
மத்திய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூவிடம் உண்மையான அதிகாரம் எதுவுமில்லை. அவர், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை போன்று கைப்பாவையாக இருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இல்லையெனில், மக்கள் உங்களை அதிகாரத்திலிருந்து விரட்டி அடிப்பர்.
பா.ஜ., அரசு நினைத்தால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை, இப்போதே அமல்படுத்த முடியும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பல கதைகளை சொல்லி ஏமாற்றுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. இதில் பா.ஜ., அரசியல் செய்கிறது. இந்த விஷயத்தில், பா.ஜ., அரசு எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
