/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., தொண்டர் துாக்கிட்டு தற்கொலை; முதல்வரின் சட்ட ஆலோசகர் தொல்லை என குற்றச்சாட்டு
/
பா.ஜ., தொண்டர் துாக்கிட்டு தற்கொலை; முதல்வரின் சட்ட ஆலோசகர் தொல்லை என குற்றச்சாட்டு
பா.ஜ., தொண்டர் துாக்கிட்டு தற்கொலை; முதல்வரின் சட்ட ஆலோசகர் தொல்லை என குற்றச்சாட்டு
பா.ஜ., தொண்டர் துாக்கிட்டு தற்கொலை; முதல்வரின் சட்ட ஆலோசகர் தொல்லை என குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2025 12:41 AM

பெங்களூரு : பெங்களூரில் வசித்து வந்த குடகை சேர்ந்த, பா.ஜ., தொண்டர் தனது அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு முதல்வரின் சட்ட ஆலோசகரான எம்.எல்.ஏ., பொன்னண்ணா காரணம் என்று, பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
குடகு மாவட்டம், சோமவார்பேட் தாலுகா, கோனிமரூர் கிராமத்தை சேர்ந்தவர் வினய் சோமய்யா, 35. பா.ஜ., தொண்டர். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். 'குடகு பிரச்னைகள் மற்றும் ஆலோசனைகள்' என்ற வாட்ஸாப் குழுவின் அட்மினாக இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த வாட்ஸாப் குழுவில், முதல்வர் சித்தராமையாவின் சட்ட ஆலோசகரும், விராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா பற்றி அவதுாறு கருத்து பதிவிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி பொன்னண்ணாவின் ஆதரவாளர் தென்னிரா மஹினா என்பவர் அளித்த புகாரில், மடிகேரி போலீசார் வினய் சோமய்யா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின், அவர்கள் ஜாமினில் வந்தனர். விசாரணைக்கு நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவும் வாங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு இரவு பணிக்காக வினய் சென்றார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக கடைசியாக தான் எழுதிய கடிதத்தை, வினய் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.
ரவுடி பட்டியல்
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:
குடகு மாவட்டத்தில் நிலவும் மக்கள் பிரச்னை பற்றி வாட்ஸாப் குழுவில் கேள்வி எழுப்பியதற்காக, என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நான் ஜாமினில் வெளியே வந்த பின்னரும், போலீசார் என் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
அரசியலுக்காக எனது வாழ்க்கையில் தென்னிரா மஹினா விளையாடினார். விராஜ்பேட் எம்.எல்.ஏ., பொன்னண்ணா கூறியதன்படி, தென்னிரா என்னை பற்றி அவதுாறு கருத்தை பரப்பினார். குடகில் பிரச்னையை துாண்டி விடுபவர் என்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு, எனது புகைப்படத்தை பதிவு செய்தனர். கடந்த காலத்திலும் தென்னிரா மஹினா கொடுத்த தொல்லையால், பலர் தற்கொலை செய்து கொண்டனர். எனது பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க முயற்சி நடந்தது.
நிதி உதவி
என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்ட வேண்டும் என்று போலீசாரை, பொன்னண்ணா தவறாக வழிநடத்தினார். குஷால்நகர் அரசு மருத்துவமனையின் நிலை குறித்து வாட்ஸாப் பில் கேள்வி எழுப்பியதற்காக, மடிகேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா, என்னை நேரில் அழைத்து மிரட்டினார். தயவு செய்து என் குடும்பத்தை சமூக, நிதி ரீதியாக பா.ஜ., கட்சி ஆதரிக்க வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு ரூபாய் மட்டும் நிதி பங்களிப்பு செய்தாலும் மனைவி, மகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். எனது மரணத்திற்கு பிறகும் எனது தாய், மனைவி, மகள், குடும்பத்தினர் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். என் மீது வழக்குப்பதிவு செய்த பின், எனக்கு ஆதரவு கொடுத்த பா.ஜ., தலைவர்கள் பிரதாப் சிம்ஹா, போப்பையா, அப்பச்சு ரஞ்சனுக்கு எனது நன்றி.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
கொலைகாரர்கள்
இதற்கிடையில், வினய் உடலை போலீசார் மீட்டு, அம்பேத்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மருத்துவமனை முன்பு, பா.ஜ., தொண்டர்கள் திரண்டனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள், மருத்துவமனைக்கு வந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் போப்பையா, அப்பச்சு ரஞ்சன் தலைமையில் குடகில் போராட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். குடகு எஸ்.பி., ராமராஜன் பேச்சு நடத்தினார்.
கர்நாடக பா.ஜ., தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பொன்னண்ணா, மந்தர் கவுடா, தென்னிரா மஹினா ஆகியோரின் புகைப்படங்களைபதிவிட்டு, கொலைகாரர்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.
கீழ்தர அரசியல்
இது குறித்து பொன் னண்ணா அளித்த பேட்டி:
வினய் சோமய்யா யார் என்றே எனக்கு தெரியாது. அவரை நான் பார்த்தது கூட இல்லை. அவரிடம் விசாரிக்க கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அப்படி இருக்கும்போது போலீசார் எப்படி விசாரிக்க செல்வர். தற்கொலை செய்த வினய் சட்டையில் இருந்தோ, தற்கொலை செய்த இடத்தில் இருந்தோ கடிதம் சிக்கவில்லை. சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளத்தில், யார் என்ன வேண்டும் என்றாலும் பதிவிடலாம்.
வினய் எழுதிய கடிதத்தை திருத்தி வெளியிட்டு இருக்கலாம். வினய் எந்த கட்சியை சேர்ந்தவராக இருக்கட்டும். வயதில் இளையவரான அவர் தற்கொலை செய்தது, எனக்கு வருத்தம் அளிக்கிறது. சாவு வீட்டிலும் அரசியல் செய்வது தான் பா.ஜ.,வின் பேஷன். அவர்கள் செய்த கீழ்மட்ட அரசியலை முறியடித்து தான், எம்.எல்.ஏ.,வாக உள்ளேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
வழக்குப்பதிவு
தென்னிரா மஹினா கூறுகையில், ''வினயை யார் என்று எனக்கு தெரியாது. எம்.எல்.ஏ., பொன்னண்ணா குறித்து அவதுாறு கருத்து பதிவிட்டதால், வினய் உட்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்தேன். குடகு மாவட்ட காங்கிரசில் எனக்கு பொறுப்பு கொடுத்து உள்ளனர். எங்கள் எம்.எல்.ஏ., கட்சியை அவமதிப்பவர்கள் மீது, போலீசில் புகார் செய்வது எனது கடமை.
''சட்டப்படி தான் புகார் செய்தேன். தற்கொலை செய்த வினய், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் போப்பையா, அப்பச்சு ரஞ்சனுக்கு நன்றி கூறி உள்ளார். எனக்கு தெரிந்து அவர்கள் 3 பேரும் தான் வினயை தற்கொலை செய்ய துாண்டி இருக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கிடையில் வினய் தற்கொலை தொடர்பாக, அவரது சகோதரர் ஜீவன், ஹென்னுார் போலீசில் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா, தென்னிரா மஹினா ஆகிய 3 பேர் மீது புகார் அளித்தார். இதில் தென்னிரா மீது மட்டும் வழக்குப்பதிவு செய்த போலீசார், எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு உள்ளனர். இதனால் பா.ஜ., தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
வினய் சோமய்யா தற்கொலை செய்யவில்லை; காங்கிரசால் கொலை செய்யப்பட்டு உள்ளார். வினய் மரணம் காங்கிரசின் 100 சதவீத பழிவாங்கும் நடவடிக்கை. போலீஸ் நிலையங்கள் காங்கிரஸ் அலுவலகமாக மாறிவிட்டன. குடகு எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
- அசோக்,எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை
வினய் சோமய்யா தற்கொலை வழக்கை சி.ஐ.டி., அல்லது எஸ்.ஐ.டி., விசாரித்தால் உண்மைவெளிவராது. சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். வினய் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரைஅமைதியாக இருக்க மாட்டோம். எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்.
- சலவாதி நாராயணசாமி,எதிர்க்கட்சி தலைவர், மேல்சபை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுதும் பா.ஜ., தொண்டர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். அரசு, உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். வினய் சோமய்யா தற்கொலை வழக்கில், யாருக்கு தொடர்பு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.
- விஜயேந்திரா,தலைவர், பா.ஜ.,

