ADDED : செப் 26, 2026 03:36 AM

பெங்களூரு: 'அடுத்த சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களுக்கு வியூகம் வகுப்பதற்காக பா.ஜ., பாதயாத்திரை அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்படுகிறது' என அக்கட்சி அறிவித் து உள்ளது.
பா.ஜ., மாநில பொதுச் செயலர் பிரீதம் கவுடா நேற்று அளித்த பேட்டி:
பிரதமர் மோடியின் மக்கள் சேவையை போற்றும் வகையில், 'சேவா சங்கல்ப அபியான்' என்ற சேவை விழா, நாடு முழுதும் நடக்கிறது. இதனுடன் இணைந்து, பூத் விஜயா சங்கல்ப யாத்திரை எனும் பாதயாத்திரை மாநில முழுதும் பா.ஜ., சார்பில் நடத்தப்படும்.
முதல் கட்டமாக அக்டோபர் 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை பாதயாத்திரை நடக்கும். கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள குரூடூமலை விநாயகர் கோவிலில் பூஜை செய்த பின் யாத்திரை தொடங்கும். எதிர்க்கட்சி தலைவர் அசோக், மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதன் பின், 16 சட்டசபை தொகுதிகளில் யாத்திரை நடக்கும். மீதமுள்ள தொகுதிகளில் அடுத்த மூன்று மாதம் பாதயாத்திரை நடக்கும். சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
