ADDED : செப் 26, 2026 03:37 AM

பெங்களூரு: ''துாய்மை பணியாளர்களின் காலை உணவு படி 35 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார்.
கர்நாடக அரசின் நகராட்சி நிர் வாக துறை சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் துாய்மை பணியாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. துாய்மை பணியாளர்கள் அணியும் உடையை அணிந்து, முதல்வர் சிவகுமார் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
துாய்மை பணியாளர்கள் என்பவர்கள், தங்கள் பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள். நீங்கள் தான் உண்மையான கர்ம யோகிகள். துாய்மை புரட்சியின் தலைவர்கள். நீங்கள் நாட்டிற்கு சேவை செய்கிறீர்கள். தாழ்வு மனப்பான்மையால் நீங்கள் சோர்வடைந்து விட கூடாது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்கள் ஆக்கினோம். உங்களுக்கு சுயமரியாதையான வாழ்க்கை அளிப்பதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது.
உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி அமைச்சர்கள் பாலகிருஷ்ணா, பசவந்தப்பா, முனியப்பா, யதீந்திரா ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் 60 சதவீதம் பணியை சிறப்பாக செய்கிறீர்கள். மீதம் உள்ள பணியை செய்யவிடாமல் உங்களை தடுப்பது யார் என்றும் எனக்கு தெரியும். நீங்கள் இல்லாவிட்டால், இந்த நகரம் குப்பை கிடங்காகிவிடும் என்பதும் எனக்கு தெரியும்.
துாய்மை பணியாளரின் மகன் பசவந்தப்பாவை நாங்கள் அமைச்சராக்கி உள்ளோம். அவருக்கு அறநிலையத்துறை கொடுத்துள்ளோம். பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்காக நகர்ப்புறங்களில் கே.பி.எஸ்., மாதிரியில் உண்டு உறைவிட பள்ளிகள் கட்டுவோம். உங்கள் பிள்ளைகளும் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும். உங்கள் கைகள் குப்பையை சேகரிக்கும் கைகள் மட்டுமல்ல. கர்நாடகாவை கட்டியெழுப்பும் கைகள்.
சுகாதாரப்பணியாளர்களான உங்களுக்கு காலை உணவு படியாக, 35 ரூபாய் வழங்கப்படுகிறது. அது, 70 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
