/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொதிக்கும் 'டைல்ஸ்' தளம் தாவணகெரேவில் அதிசயம்
/
கொதிக்கும் 'டைல்ஸ்' தளம் தாவணகெரேவில் அதிசயம்
ADDED : நவ 18, 2025 04:57 AM
தாவணகெரே: சில சம்பவங்கள், அறிவியலுக்கு சவால் விடுகின்றன. இது போன்ற சம்பவம், தாவணகெரேவில் ஒரு வீட்டில் நடந்துள்ளது.
தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவின் ராஜாராம் காலனியில் வசிப்பவர் மாருதேஷ். இவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது வீட்டில் தரைப்பகுதியில் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக இவரது வீட்டில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
வீட்டின் ஹாலில் உள்ள டைல்ஸ், திடீரென தீயாக கொதிக்கிறது. குளிர்ந்த நீரை ஊற்றி துடைத்தாலும், வெப்பம் அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை. என்ன காரணத்தால் டைல்ஸ் சூடாகிறது என்பதே தெரியாமல் உள்ளது.
இது குறித்து தகவலறிந்து, தீயணைப்பு படையினர், நில ஆய்வியல் வல்லுநர்கள், போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் இப்படி ஏற்படலாம் என, வல்லுநர்கள் கூறியதால், உள்ளாட்சி ஊழியர்கள், அந்த வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்தனர். ஆனால் அப்போதும், வெப்பம் குறையில்லை.
வீட்டின் மற்ற இடங்கள் குளிர்ச்சியாக உள்ளன. ஹாலில் மட்டும் வெப்பம் அதிகரிக்கிறது. குடும்பத்தினர் தினமும் பயத்துடன் நாட்களை கடத்துகின்றனர். ஹாலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். தகவலறிந்து சுற்றுப்புற மக்கள், மாருதேஷின் வீட்டுக்கு கூட்டம், கூட்டமாக வந்து பார்வையிடுகின்றனர்.

