விளையாட்டை நேர்மையாக அணுக குத்துச்சண்டை வீரர்களுக்கு அறிவுரை
விளையாட்டை நேர்மையாக அணுக குத்துச்சண்டை வீரர்களுக்கு அறிவுரை
ADDED : செப் 17, 2026 11:12 PM

பெங்களூரு: 'விளையாட்டை நேர்மையாக அணுக வேண்டும்' என, குத்துச்சண்டை வீரர் - வீராங்கனையருக்கு, முன்னாள் வீரர் நாராயண் அறிவுரை வழங்கினார்.
தென் மாநிலங்களை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில், 'ராயுடு பாக்ஸிங் டீம்' என்ற விளையாட்டு அமைப்பு சார்பில், பெங்களூரு கோரமங்களாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் முதலாம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின.
இந்த போட்டிகளை அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர் கேப்டன் நாராயண் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
குத்துச்சண்டை என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை. வீரர்களின் கடுமையான உழைப்பு, சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பின் அடையாளம் அது. தென் மாநிலங்களில் குத்துசண்டையில் ஜொலிக்கும் நிறைய திறமைசாலிகள் உள்ளனர். தற்போது நடக்கும் போட்டி வீரர் - வீராங்கனைகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்தவும், தேசிய அளவில் அவர்கள் குத்துச்சண்டையில் ஜொலிக்கவும் மிகவும் உதவும்.
உலக பாக்சிங் கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் இப்போட்டிகள் நடப்பதால், அதில் சிறப்பாக செயல்படுவோருக்கு சர்வதேச அளவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டியில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையர் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி, விளையாட்டை நேர்மையான முறையில், விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
