UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:04 PM

ஹாசன்: விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகளை அவரின் பெற்றோர் தானம் அளித்தனர்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா தாலுகாவின் சக்கனஹள்ளிகட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகவுடா – சிவம்மா தம்பதி மகன் ரவிகுமார், 31. பெங்களூரில், விப்ரோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலையில் விடுமுறையில் ஹாசனுக்கு சென்றிருந்தார். ஜூலை 6ம் தேதி பரசனஹள்ளி கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில் ரவிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்துக்கு பின், உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்., 2ம் தேதி, அவர் மூளைசாவு அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நேரத்திலும் கூட, ரவிகுமாரின் பெற்றோர், தங்கள் மகன் உறுப்புகள் மூலம் பலருக்கு வாழ்க்கை கிடைக்கும் என்ற எண்ணத்தில், உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, மாநில அரசின் அதிகாரபூர்வ உறுப்பு தானம் திட்டமான, ‘ஜீவசார்த்தனடே’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
