அமைச்சரவை விரிவாக்கம்: கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு
அமைச்சரவை விரிவாக்கம்: கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு
ADDED : ஜூலை 18, 2026 11:04 PM

கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கர்நாடகாவில் சிவகுமார் முதல்வ ராக பதவியேற்று ஒரு மாதம் கடந்து விட்டது. அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இப்பதவியை பெற எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள் இடையே போட்டி எழுந்து உள்ளது.
சில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள், தன்னை சந்திக்க வருவதை அறிந்த முதல்வர் சிவகுமார், 'தங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் இங்கு வர வேண்டாம்' என்று கூறிவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன் டில்லியில் ராகுலை, மாநில தலைவர் ஹரிபிரசாத், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது ராகுல், தனியார் நிறுவனம் மூலம் நடத்திய ஆய்வின்படி, அமைச்சர் பட்டியலை கொடுத்தார். அதில், இளம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அமைச்சரவை விரிவாக்கம் பற்றி அடுத்த வாரம் பேசலாம் என ராகுல் கூறியுள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு, நேற்று முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் சென்றனர்.
அப்போது கார்கேயிடம், ராகுல் கொடுத்த பட்டியல் குறித்து விவாதித்தார். அத்துடன் ராகுலிடம் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில், 11 மூத்த முன்னாள் அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றிருந்தனர். இதை பரிசீலித்த கட்சி மேலிடம், 50 சதவீதம் பேரை குறைக்க, அறிவுறுத்தி உள்ளது.
ராகுல் கூறியபடி இளம் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதி பட்டியல் தயாரானதும், கட்சி மேலிடத்துக்கு அனுப்பப்படும்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் தரம் சிங் மகன் அஜய் சிங், எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா உட்பட பலர் கார்கேவை சந்தித்து அமைச்சர் பதவி கேட்டுள்ளனர்.
