120 இடங்களில் வெற்றி பெற முடியுமா? குமாரசாமிக்கு செலுவராயசாமி சவால்!
120 இடங்களில் வெற்றி பெற முடியுமா? குமாரசாமிக்கு செலுவராயசாமி சவால்!
ADDED : ஜூலை 21, 2026 08:19 PM

பெங்களூரு: ''பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டு, ம.ஜ.த.,வால், 120 இடங்களில் வெற்றி பெற முடியுமா,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமிக்கு, நாகமங்களா காங்கிரஸ் எம்.எல்.ஏ., செலுவராயசாமி சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு தைரியம் இருந்தால், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறட்டும். 2028 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ம.ஜ.த.,வை, 120 இடங்களில் வெற்றி பெற வைக்கட்டும். விதான் சவுதா முன் நின்று 120 இடத்தில் என் கட்சியை வெற்றி பெற வைப்பேன் என்று சொல்ல அவருக்கு தைரியம் உள்ளதா?
முன்னாள் பிரதமர் மகன் என்ற முறையில் குமாரசாமி செய்த சாதனை என்ன. எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று, தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து, கற்று கொள்ள வேண்டும்.
ரேவண்ணாவிடம் இருக்கும் மனிதநேயம் கூட குமாரசாமியிடம் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்த குமாரசாமி, இப்போது அவர்கள் புகழ் பாடுகிறார். ஆப்பரேஷன் கமலாவை முதலில் ஆரம்பித்தவர் குமாரசாமி தான். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்பது மாநில மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குமாரசாமி கூறுகையில், ''ம.ஜ.த., 120 இடங்களில் தனித்து வெற்றி பெறும் காலம் வரும். அதுவரை நான் சாக மாட்டேன். மாநில கட்சி நிலைத்து நிற்பது எவ்வளவு கடினம் என தெரியும்.
''தேசிய கட்சியான காங்கிரஸ் நிலை என்ன. தமிழகத்தில், தி.மு.க.,வை ஏமாற்றி விட்டனர். கடந்த, 20 ஆண்டுகளாக காங்கிரசார் என்னை விமர்சித்து, என் மீது வன்ம விஷத்தை கக்குகின்றனர்,'' என்றார்.
