ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்க உங்களால் முடியுமா? முதல்வர் சிவகுமாருக்கு விஜயேந்திரா சவால்
ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்க உங்களால் முடியுமா? முதல்வர் சிவகுமாருக்கு விஜயேந்திரா சவால்
ADDED : ஆக 15, 2026 01:05 AM

பெங்களூரு: ''முதல்வர் சிவகுமாருக்கு துணிச்சல், தைரியம் இருந்தால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்து பார்க்கட்டும்,'' என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால் விடுத்துள்ளார்.
'கர்நாடகாவில் அரசுக்கு சொந்தமான மற்றும் பொது இடங்களில் தனியார் அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி பெறுவது கட்டாயம்' என, அமைச்சரவை, நேற்று முன்தினம் முடிவு செய்தது.
இது தொடர்பாக, கர்நாடக அரசு வளாகங்கள் மற்றும் பொது சொத்து பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மசோதா 2026, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 'இந்த மசோதாவின் நோக்கமே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்துவதே' என கூறி உள்ளனர். இதற்கு, முதல்வர் சிவகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படக்கூடாது; காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு மகளிர் கூட இடம்பெறாததை கண்டித்தும் விதான் சவுதா வளாகத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
சிவகுமார் துணை முதல்வராக இருந்த போது, சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாட லை பாடினார். தற்போது, அவர் முதல்வரான பின் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயல்பாடுகளை முடக்கப் பார்க்கிறார்.
கர்நாடக வரலாற்றிலேயே முதன் முறையாக மாநில அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் காங்கிரஸ் தான். இதன் மூலம் காங்கிரசின் உண்மையான சுய ரூபம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
முதல்வர் சிவகுமாருக்கு உண்மையிலேயே துணிச்சல், தைரியம் இருந்தால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை மாநிலத்தில் தடைசெய்து பார்க்கட்டும். இதெல்லாம் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே செய்யும் சதியே. குப்பை, கார் பார்க்கிங் என பல வகைகளில் வரி வசூலிப்பதிலேயே மாநில அரசு கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
