கார் ‘ஸ்டியரிங ் ’ விளையாட்டு பொருள் இல்லை: வழக்கை ரத்து செய்ய கேட்டவருக்கு ஐகோர்ட் மறுப்பு
கார் ‘ஸ்டியரிங ் ’ விளையாட்டு பொருள் இல்லை: வழக்கை ரத்து செய்ய கேட்டவருக்கு ஐகோர்ட் மறுப்பு
UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 10:44 PM
பெங்களூரு: சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதி, மூன்று பேர் பலியான வழக்கில், சிறுவன் தந்தை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
‘‘கார் ஸ்டியரிங் விளையாட்டு பொருள் இல்லை,’’ என்று, நீதிபதி காட்டமாக கூறியுள்ளார்.
மைசூரை சேர்ந்தவர் நதீம் உர் ரகுமான். இவரது மகனுக்கு தற்போது, 20 வயது ஆகிறது. அவர், கடந்த 2020ல் 14 வயது சிறுவனாக இருந்த போது, அவர் ஓட்டி சென்ற கார் மோதியதில், பைக்கில் சென்ற மைசூரை சேர்ந்த ரமேஷ், 40, மனைவி உஷா, 30, இவர்களின் மகன் மோனிஷ், 5, இறந்தனர்.
சிறுவனான மகனுக்கு கார் கொடுத்ததாக, நதீம் உர் ரகுமான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எதிர்பாராமல் மகன் ஏற்படுத்திய விபத்துக்காக, தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, நதீர் உர் ரகுமான், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.
அரசு தரப்பு வக்கீல் வாதத்தின் போது, ‘காரை ஓட்டுவதற்கு கேட்டதால், சிறுவன் என்று கூட பாராமல் மகனுக்கு, கார் சாவியை கொடுத்து மனுதாரர் அனுப்பி உள்ளார். தவறு செய்த மகனுக்கு உடந்தையாக இருந்த அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது’ என்றார்.
மனுதாரர் தரப்பு வக்கீல் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி நாகபிரசன்னா கூறிய தீர்ப்பு:
கார் உட்பட மற்ற வாகனங்களின் ஸ்டியரிங், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருள் இல்லை. பொது சாலைகளை அவர்களின் மகிழ்ச்சிக்காக விளையாட்டு மைதானமாக மாற்ற முடியாது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடை செய்யும் சட்டம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படவில்லை.
பயிற்சி பெறாத, சட்டப்படி தகுதியற்ற நபர்கள் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், அவர்களுக்கு யார் சாவி கொடுத்தனரோ அவர்கள் தான் பொறுப்பு. இவ்வழக்கில் மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
