UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 10:44 PM
பெங்களூரு: விதான் சவுதாவை வெடிகுண்டு வைத்து தகர்த்தது போல, போலி ‘ஏ.ஐ., வீடியோ’ வெளியிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரு அம்பேத்கர் வீதி யிலுள்ள அரசு அலுவலகமான விதான் சவுதா கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமீபத்தில் பரவியது.
இந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் விதான் சவுதா கட்டடத்தை சுடுவது போல சைகை செய்கிறார். இதையடுத்து, விதான் சவுதா கட்டடம் வெடித்து சிதறுகிறது. மேலும், ‘நான், விதான் சவுதாவை வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்டேன்’ என அந்நபர் கூறுவது போல தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரின் அடையாளமாக திகழும் விதான் சவுதாவுக்கு இழுக்கு ஏற்படுத்திய நபர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரினர்.
இந்த வீடியோவை பதிவேற்றிய நபர் மீது பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவை பதிவு செய்தவரின் சமூகவலைதள கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.
