/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
21ல் சாங்கே ஏரியில் 'காவிரி ஆரத்தி' பெங்., குடிநீர் வாரிய தலைவர் அறிவிப்பு
/
21ல் சாங்கே ஏரியில் 'காவிரி ஆரத்தி' பெங்., குடிநீர் வாரிய தலைவர் அறிவிப்பு
21ல் சாங்கே ஏரியில் 'காவிரி ஆரத்தி' பெங்., குடிநீர் வாரிய தலைவர் அறிவிப்பு
21ல் சாங்கே ஏரியில் 'காவிரி ஆரத்தி' பெங்., குடிநீர் வாரிய தலைவர் அறிவிப்பு
ADDED : மார் 18, 2025 05:12 AM

பெங்களூரு: காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பெங்களூரு சாங்கே ஏரியில், வரும் 21ல் 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூங்கா நகரமான பெங்களூரு மக்களின் தாகத்தைத் தணிக்கும் காவிரிக்கு, மரியாதை செலுத்தும் வகையில், நகரின் சாங்கே ஏரியில் முதன் முறையாக 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்த, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான ஆயத்த கூட்டம் நேற்று முன்தினம் சாங்கே ஏரிப்பகுதியில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின், ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:
உத்தர பிரதேசம் வாரணாசியில் நடக்கும் கங்கா ஆரத்தி போன்று, காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் 21ம் தேதி சாங்கே ஏரியில் 'காவிரி ஆரத்தி' நடத்தப்பட உள்ளது.
இந்த ஆரத்தியை நடத்த, உத்தர பிரதேசத்தில் இருந்து பூஜாரிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடக்கும். பாகமண்டலத்தில் உள்ள காவிரி, கன்னிகா, சுஜ்யோதி நதிகளின் சங்கமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர், பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படும்.
மேலும், லேசர் நிகழ்ச்சி, நேரடி இசைக்குழு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இது வரலாற்று நிகழ்வாக பதிவாகும்.
காவிரியின் துணை நதியான விருஷபாவதி நதியின் மூல ஆதாரம் என்பதால், காவிரி ஆரத்தி நடத்த, சாங்கே ஏரி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஏரிக்கு அருகில் ஸ்ரீ ஜலகங்கம்மா கோவில் உள்ளது.
விருஷபாவதி பிறந்த இடமாக எங்கள் மூதாதையர் இதை குறிப்பிட்டுள்ளனர். இனி ஆண்டுதோறும் இங்கு காவிரி ஆரத்தி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருஷபாவதி நதி, பசவனகுட புல் டெம்பிளில் நந்தியின் காலடியில் இருந்து தோன்றுவதாக வரலாற்று ஆய்வாளர்களும்; சாங்கே ஏரியில் இருந்து தோன்றுவதாக சிலரும் கூறுகின்றனர்.