/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சக்ரவர்த்தி சூலிபெலே அரசியல் பேச தடை
/
சக்ரவர்த்தி சூலிபெலே அரசியல் பேச தடை
ADDED : ஜூன் 20, 2025 11:12 PM

உடுப்பி:சொற்பொழிவின்போது அரசியல் பேசவும், தலைவர்கள் குறித்து விமர்சிக்கவும் யுவ பிரிகேட் அமைப்பின் நிறுவனர் சக்ரவர்த்தி சூலிபெலேவுக்கு குந்தாப்பூர் போலீசார் தடை விதித்துள்ளனர்.
யுவ பிரிகேட் அமைப்பின் நிறுவனர் சக்ரவர்த்தி சூலிபெலே, பொது நிகழ்ச்சிகளில் அரசியல், ஹிந்து மதம் குறித்து ஆக்ரோஷமாக பேசி வந்தார்.
இவர் பேச்சு வகுப்புவாத கலவரத்தை துாண்டுவதாகவும், காங்கிரஸ் கட்சி குறித்து தவறான தகவல்கள் பரப்புவதாகவும் மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் மனோகர், சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு ஹை கிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்நிலையில், உடுப்பி குந்தாபூரில் 'ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குங்கள்' என்ற தலைப்பில், சக்ரவர்த்தி சூலிபெலே, இன்று முதல் வரும் 23ம் தேதி வரை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு குந்தாபூர் போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்தியும் பேசக்கூடாது என போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து, நேற்று சூலிபெலே அளித்த பேட்டி:
கர்நாடகாவில் அரசியல் பேசக்கூடாது என்பது எப்போது ஒரு விதியாக மாறியது? எனக்கு நோட்டீஸ் வழங்குவது புதிதல்ல. இம்முறை அரசியல், அரசியல் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.
அப்படியானால், நேரு, இந்திரா, ராஜிவ் பற்றி பேசக்கூடாது என்று அர்த்தமா? சிலர் என்னை குந்தாபூருக்கு வர வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால், நான் நிச்சயம் வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொற்பொழிவு கூட்டம் நடக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சக்ரவர்த்தி சூலிபெலே, வாய் திறந்தாலே பொய் தான் பேசுகிறார் என்பது மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர் உடுப்பியில் மூன்று நாட்கள் பயணம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், வெறுப்பு, பொய் பேசுவதையும், விஷமத்தனமான கருத்துகள் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும். உடுப்பி அமைதியை விரும்பும் மாவட்டம். சிறுபான்மையினருக்கு வீட்டு வசதி திட்டத்தில் இட ஒதுக்கீடு 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பதாலே அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. பா.ஜ., மக்களை தவறாக வழிநடத்துகிறது.
லட்சுமி ஹெப்பால்கர்,
குழந்தைகள், மகளிர் நலத்துறை அமைச்சர்