/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேண்டிய வரம் அளிக்கும் சந்திர மவுலீஸ்வரர்
/
வேண்டிய வரம் அளிக்கும் சந்திர மவுலீஸ்வரர்
ADDED : செப் 09, 2025 04:58 AM

மைசூரு நகரை சுற்றி வந்தால், வீதிக்கு வீதி கோவில்களை காணலாம். இவை, வரலாற்று பின்னணி கொண்டவை. பக்தர்களின் கஷ்டங்களை நீக்கி, நல்வாழ்வு அளிக்கும் சக்தியுள்ளவை. இதுபோன்ற கோவில்களில், சந்திர மவுலீஸ்வரர் கோவிலும் ஒன்று.
மைசூரு நகரில் அமைந்துள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். திராவிட கட்டடக் கலையில் கட்டப்பட்டது. இது அதிசயங்களை நிகழ்த்தும் புண்ணிய தலமாக விளங்குகிறது. 1942ல் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்கம், சாலிகிராம கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. பார்வதி, விநாயகரும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
நாக தோஷம், கிரக தோஷங்கள் உட்பட, எந்த தோஷங்கள் இருந்தாலும், நிவர்த்தி செய்யும் தலம் இதுவாகும். கிரக தோஷங்களால் வாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் பக்தர்கள், சந்திர மவுலீஸ்வரரை தரிசித்து, நிவர்த்தி பெறுகின்றனர்.
கிரக தோஷங்கள் இருந்தால், திருமணம் தள்ளிப்போகும்; குழந்தை பாக்கியம் கிடைக்காது; வாழ்க்கையில் தொடர் கஷ்டங்கள் வாட்டும். இது போன்று கஷ்டத்தில் தவிப்பவர்கள், இங்கு வந்து மனமுருகி வேண்டினால், தோஷங்கள் மறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி மலரும் என்பது ஐதீகம். தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பின், கோவிலுக்கு சந்திர மவுலீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம், ஷத ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.
கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இங்கு சோமநாத லிங்கம், மல்லிகார்ஜுனர், மஹாகாளேஸ்வரர், ஓம் காரேஸ்வரர், கேதார் நாதர், பீமா சங்கரா, விஸ்வநாதர், திரயம்பகேஸ்வரர், வைத்ய நாதர், நாகேஸ்வரா, ராமேஸ்வரர், பிருஷ்ணேஸ்வரர் என, 12 லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
கோவிலின் சிறப்பை தெரிந்து கொண்டு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்கள், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பெருமளவில் பக்தர்கள் வருவர். ஆண்டுதோறும் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 146 கி.மீ., மங்களூரில் இருந்து 253 கி.மீ., மாண்டியாவில் இருந்து 43 கி.மீ., தொலைவில், மைசூரு உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும் மைசூருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள், பஸ்களும் இயக்கப்படுகின்றன. விமானத்தில் வருவோர், மைசூரின் மண்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அரசு பஸ்கள் அல்லது தனியார் வாகனங்களில், சந்திர மவுலீஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 7:00 மணி முதல், 11:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை. தொலைபேசி: 0821 - 2414 120
- நமது நிருபர் -