25 ஆண்டுக்கு பின் முதல்வர் பிரதீப் ஈஸ்வர் விருப்பம்
25 ஆண்டுக்கு பின் முதல்வர் பிரதீப் ஈஸ்வர் விருப்பம்
ADDED : செப் 27, 2026 11:13 PM

தாவணகெரே: ''எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின், எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம்,'' என சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 41 தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வரும் 2028 சட்ட சபை தேர்தலிலும், காங்கிரஸ் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின், எனக்கு முதல்வராக வாய்ப்பு கிடைக்கலாம்.
கல்வித்துறை இன்று தொழிலாக மாறுகிறது. இது குறித்து, 2028ல் நான் பதிலளிப்பேன். கல்வி மேம்பாட்டு துணை கமிட்டிக்கு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தால், சிறப்பாக பணியாற்றி காட்டுவேன்.
என் தொகுதியின், ஏழாம் வகுப்பில் பயிலும் 359 மாணவர்களுக்கு, கன்னட அரிச்சுவடி எழுத்துகளே எழுத தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மாநில அரசு கருவூலம் காலியானதாக, எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, அசோக் தகுதியானவர் அல்ல. வரும் நாட்களில் சுனில் குமார், எதிர்க்கட்சி தலைவராகவும், சோமண்ணா மாநில பா.ஜ., தலைவராகவும் ஆவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
