/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பரபரப்பான சூழலில் ஏப்., 2ல் முதல்வர் சித்தராமையா டில்லி பயணம்!: அமைச்சரவை மாற்றம், 'ஹனி டிராப்' குறித்து ஆலோசனை
/
பரபரப்பான சூழலில் ஏப்., 2ல் முதல்வர் சித்தராமையா டில்லி பயணம்!: அமைச்சரவை மாற்றம், 'ஹனி டிராப்' குறித்து ஆலோசனை
பரபரப்பான சூழலில் ஏப்., 2ல் முதல்வர் சித்தராமையா டில்லி பயணம்!: அமைச்சரவை மாற்றம், 'ஹனி டிராப்' குறித்து ஆலோசனை
பரபரப்பான சூழலில் ஏப்., 2ல் முதல்வர் சித்தராமையா டில்லி பயணம்!: அமைச்சரவை மாற்றம், 'ஹனி டிராப்' குறித்து ஆலோசனை
ADDED : மார் 27, 2025 05:38 AM

பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், முதல்வர் சித்தராமையா ஏப்ரல் 2ம் தேதி டில்லி செல்கிறார். அமைச்சர் ராஜண்ணாவை, 'ஹனி டிராப்' செய்ய முயன்றது குறித்து, மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க உள்ளார். அமைச்சரவை மாற்றம் குறித்தும், அப்போது ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்து வரும் மே 20ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
அரசு மீது தினமும் ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன. அமைச்சர்களின் சிலரின் செயல்பாடுகள் சரியில்லை என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், 'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிய வழக்கில், சித்தராமையா மீது லோக் ஆயுக்தாவும் வழக்குப்பதிவு செய்தது.
அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். முடா வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று, லோக் ஆயுக்தா, நீதிமன்றத்தில், 'பி' அறிக்கை தாக்கல் செய்தது.
'சஸ்பெண்ட்'
தற்போது, அமைச்சர் ராஜண்ணாவை, ஒரு கும்பல் ஹனி டிராப் செய்ய முயன்ற விவகாரம், சித்தராமையாவுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஹனி டிராப் விவகாரத்திற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அறிக்கை
இதற்கிடையில், எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், எதிர்க்கட்சி தலைவர் அசோக் புது குண்டை துாக்கி போட்டு உள்ளார்.
இவ்விவகாரங்கள் தொடர்பாக, சட்டசபையில் அமளியில் இறங்கிய 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.க்கள் ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 2ம் தேதி முதல்வர் சித்தராமையா டில்லி செல்ல உள்ளார்.
மேலிட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்ற விவகாரம் குறித்து, மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க உள்ளார்.
'ராஜண்ணா கட்சியின் மூத்த தலைவர். அவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது. அவருக்கு ஆதரவாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்' என்று, மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறவும் சித்தராமையா தயாராகி வருகிறார்.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே, கர்நாடக காங்கிரஸ், கட்சி மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்காக எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
ஆனாலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற யோகேஸ்வர், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து உள்ளனர்.
சுதாரிப்பு
சட்டசபை கூட்டத்தொடரின் போது நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மீது எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினர்.
அமைச்சர்கள் இருவர் வார்த்தை மோதலிலும் ஈடுபட்டனர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்தும், மேலிட தலைவர்களிடம் சித்தராமையா ஆலோசனை நடத்தலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதல்வரின் டில்லி பயணம் எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது.
இதற்கிடையில், ஹனி டிராப் விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவதால், சுதாரித்து கொண்ட துணை முதல்வர் சிவகுமாரும் டில்லி செல்ல திட்டமிட்டு உள்ளார்.
முதல்வர் செல்வதற்கு முன்பே, சிவகுமார் டில்லிக்கு சென்று வரலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.