ADDED : ஜூலை 22, 2026 11:25 PM

பெங்களூரு: ''சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வாருங்கள்,'' என்று, பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.
கர்நாடகாவில் இருந்து கடந்த ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சியில் இருக்கும் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பெங்களூரு விதான் சவுதாவில் தலைமை செயலர் ஷாலினியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுடன் நடந்த உரையாடலில் ஷாலினி பேசியதாவது:
யாத்கிரில் இருந்து முதல்முறையாக நான்கு பேர் இந்திய குடிமை பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல கோலாரில் இருந்தும் நான்கு பேர் தேர்வாகி இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
அரசு பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் நீங்கள், பயிற்சிக்கு பின், பணியாற்றும் மாவட்டங்களில் நேர்மை, தைரியத்தை கடைப்பிடிப்பதன் மூலம், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வா ருங்கள்.
சிறந்த நிர்வாகத்தின் காரணமாக, கர்நாடகா பல துறைகளில் நாட்டின் முன்னணி மாநிலமாக உள்ளது.
புதிய அதிகாரிகளான நீங்கள் மொழி, கலாசாரம், மக்களின் வாழ்க்கை முறையை புரிந்து கொண்டு பணியாற்றினால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியும். மக்கள் பிரச்னைகளை கேட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் கண்ணோட்டத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
பிரச்னைகளின் மூல காரணத்தை நன்கு ஆராய்ந்து, அதை திறம்பட தீர்க்கும் நிர்வாக திறனை வளர்ப்பதே அரசு பணியின் முக்கிய பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
