ADDED : டிச 01, 2025 05:23 AM
நெலமங்களா: வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தை மீது கார் மோதியதில், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை உயிர் தப்பியது.
பெங்களூரு நெலமங்களா சுபாஷ் நகர் அருகே வீட்டின் முன்புள்ள சாலையில் மூன்று வயது குழந்தை தக் ஷித் விளையாடி கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார், குழந்தை மீது மோதியது. இதில், குழந்தையின் தலை, முகம், முதுகில் காயம் ஏற்பட்டது.
குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுதது. இருப்பினும், காரின் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்று விட்டார்.
குழந்தையின் அழுகுரலை கேட்ட குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து குழந்தையை மீட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற காரை பிடிக்க முடியவில்லை. ஆனால், கார் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதையடுத்து, குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறினர்.
குழந்தை மீது கார் மோதிய விபத்து குறித்த கண்காணிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நெலமங்களா போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

