ADDED : ஆக 31, 2025 06:13 AM

ஹாசன்:குழந்தைகள் இடையே ஏற்பட்ட மோதல், பெற்றோரிடம் நீண்டு, ஒருவர் கொலையில் முடிந்தது.
ஹாசன் மாவட்டம், அரசிகெரேயை சேர்ந்தவர்கள் டவுபிக், 28. பரான். இருவரின் குழந்தைகளும் தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். 25ம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த டவுபிக்கின் மகன் மீது, பரான் மகன் தண்ணீர் பாட்டிலை வீசினார்.
இதையறிந்த டவுபிக், பரானிடம் 'உங்கள் மகனை கண்டித்து வையுங்கள்' என்று கூறியுள்ளார். அதன் பின், நான்கு நாட்கள் கழித்து, பி.எச்., சாலையில் உள்ள கடையில் இருவரும் சந்தித்தபோது, குழந்தைகள் விஷயமாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது.
பரான், டவுபிக்கை தள்ளிவிட்டார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கோபம் அடைந்த அவரது உறவினர்கள், பரான் வீட்டை அடித்து நொறுக்கினர். வெளியில் நின்றிருந்த அவரது காருக்கு தீ வைத்தனர். போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த அவர்கள், தீயை அணைத்தனர். பதற்றத்தை குறைக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு குடும்ப உறுப்பினர்களிடமும் போலீசார் சமாதான பேச்சு நடத்தி வரும் நிலையில் பரான் கைது செய்யப்பட்டார்.

