
நடிகை மீது எரிச்சல்
ஸ்ரீநகர் கிட்டி மற்றும் ரசிதா ராம் இணைந்து நடித்துள்ள, சஞ்சு வெட்ஸ் கீதா -2 படக்குழுவினர், ரசிதா ராம் மீது எரிச்சலில் உள்ளனர். பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராமல், 'டிமிக்கி' கொடுக்கிறார் என, இவர் மீது கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, இயக்குநர் நாகசேகரிடம் கேட்டபோது, ''படத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளோம். இதில் நடிக்கும் கலைஞர்களுக்கு உணவு, காஸ்ட்யூம்ஸ், ஊதியம் என, அனைத்தும் வழங்கியுள்ளோம். அவர்கள் பட பிரமோஷன் நிகழ்ச்சியின்போது, படக்குழுவினருடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெறும் நடிப்புடன் நிற்காமல், நாம் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்ற, உணர்வும் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் வேண்டுகோள் விடுத்தும், ரசிதா ராம் பிரசாரத்துக்கு வரவில்லை,'' என்றார்.
அறிமுக இயக்குநர்
தர்ம கீர்த்தி ராஜ் நடிப்பில், சத்யஜித் ஷபீர் நடிப்பில் தயாரான, புல்லெட் இன்று மாநிலம் முழுதும் திரையிடப்படுகிறது. இது பற்றி இயக்குநர் கூறுகையில், ''நான் தமிழில் பாரதிராஜா இயக்கிய, 16 வயதினிலே படம் மூலம் திரையுலகில் நுழைந்தேன். இசை அமைப்பாளர் இளையராஜா, என் பெயருடன் 'சத்யஜித்' சேர்த்தார். அன்று முதல் சத்யஜித் ஷபீர் ஆனேன்.
''இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் 75 படங்களில் நடித்துள்ளேன். நான் கர்நாடகாவை சேர்ந்தவன் என்பதால், படம் இயக்க விரும்பினேன். அந்த ஆசை புல்லெட் மூலம் நிறைவேறியுள்ளது. தயாரிப்பாளரும் நானே. இதில் தர்ம கீர்த்திராஜுக்கு ஜோடியாக, ஸ்ரேயா சுக்லா நடிக்கிறார்,'' என்றார்.
நாயகன் மறதி
நிஷா ஹெக்டே உட்பட பெரும்பாலும் புதியவர்களே பணியாற்றும், பிளாக் ஷிப் படத்தின் டிரெய்லர் வெளியானது. உபேந்திராவின் தீவிர ரசிகர் ஜீவன் ஹள்ளிகார், இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கதை குறித்து, அவர் கூறுகையில், ''நான் உபேந்திராவால் ஈர்க்கப்பட்டு, திரையுலகுக்கு வந்தேன். இது கிரைம், திரில்லர் கதை கொண்டதாகும். சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. நாயகன், வில்லன் இடையிலான மோதலால், நாயகனுக்கு சில சம்பவங்கள் மறந்து போகின்றன. அதை நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்பதே, கதையின் சாராம்சம். பெங்களூரு, மும்பை என, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது,'' என்றார்.
சின்னத்திரையால் வாய்ப்பு
கன்னடத்தில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ள, நடிகை அபூர்வா ஆராத்யா, தற்போது கன்னடம், தமிழ், மலையாளம் படங்களில் பிசியாக இருக்கிறார். இவரது நடிப்பில் மாதொந்து ஹேளுவே திரைப்படம், இன்று திரைக்கு வருகிறது.
இது குறித்து, அபூர்வா ஆராத்யா கூறுகையில், ''நான் மைசூரை சேர்ந்தவள். இந்த படத்திலும் மைசூரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தாய், தந்தை இல்லாமல் பாட்டியின் ஆதரவில் வளர்ந்த பெண், என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே கதையாகும். சின்னத்திரை தொடரில், என் நடிப்பை கண்டு, படங்களில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஹூப்பள்ளி, தார்வாடில் படப்பிடிப்பு நடந்தது,'' என்றார்.
திரில்லர் திரைப்படம்
கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள நடிகர் திலக் சேகருக்கு, சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கிடைக்கவில்லை. அதற்காக அவர் மவுனமாக இருக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் நடிக்கிறார். தற்போது உசிரு என்ற படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா ஹெக்டே நடிக்கிறார்.
திலக் சேகர் கூறுகையில், ''இது சஸ்பென்ஸ், திரில்லர் கதை கொண்டதாகும். இதில் நான் விசாரணை அதிகாரியாக நடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்துள்ளது. தமிழில் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரபாகர், முதல் முறையாக கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் இதுவாகும். வெற்றி பெறும் என, நம்புகிறோம்,'' என்றார்.
இயக்குநருக்கு மிரட்டல்
மூத்த நடிகை மாலாஸ்ரீ, கிஷன், தனிஷா குப்பந்தா நடிக்கும் பென் டிரைவ் திரைப்பட பாடல்கள், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதை பற்றி இயக்குநர் செபாஸ்டியன் கூறுகையில், ''வெங்கடேஷ் தயாரிப்பில், படம் தயாராகிறது. என் முந்தைய படங்களை விட, இது மாறுபட்டதாக இருக்கும். 'பென் டிரைவ்' படத்தை துவக்கியபோது, எனக்கு தொலைபேசியில் மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வந்தது. நாங்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. ஜூலை 4ல் திரைக்கு வருகிறது,'' என்றார்.