
10ல் முதல் பாடல்
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகன் ஜெயித்கான் அறிமுகமான முதல் திரைப்படம் பனாரஸ் , அமோக வெற்றி பெற்றது. இப்போது கல்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இதை அனில்குமார் இயக்குகிறார். இதில் ஜெயித்கானுக்கு ஜோடியாக ரசிதா ராம் நடிக்கிறார். நடிகை மலைகா வசுபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி, ஆர்வத்தை துாண்டியுள்ளது. படத்தின் முதல் பாடல் 10ம் தேதி வெளியாகிறது. இந்த பாடலில் மலைகா வசுபால் நடனம் ஆடியுள்ளார். பாடல்களுக்கு இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார்.
நடிகர் மகள் அறிமுகம்
நடிகர் துனியா விஜய் மகள் ரிதன்யா, லேண்ட் லார்ட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இதில் அவர் பாக்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. உயர்நிலைப் பள்ளி, கல்லுாரி மாணவியாக இருந்தபோதே, வாய்ப்புகள் தேடி வந்தன. இதற்கு விஜய் சம்மதிக்கவில்லை. டிகிரி முடித்த பின்னரே, திரையுலகுக்கு மகள் வர வேண்டும் என்பதில், அவர் உறுதியாக இருந்தார். எனவே டிகிரி முடித்த பின், மும்பையில் உள்ள அனுபம் கேர் இன்ஸ்டியூட்டில், ரிதன்யா நடிப்பு பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்த பின், சில நாடகங்களில் நடித்த இவர், இப்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.
குஷி மூடில் மனைவி
நடிகை ஹர்ஷிகா பூஞ்சா, நடிகர் புவன் பொன்னன்னா பல ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்துக்கு பின், இருவரும் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், புவன் பொன்னன்னா நடிப்புக்கு திரும்பியுள்ளார். யோகராஜ்பட் இயக்கும் ஹலோ 123 என்ற படத்தில், நாயகனாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. யோகராஜ் பட் பிரபமான இயக்குநர், வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரது படத்தில் தன் கணவர் நடிப்பதால், ஹர்ஷிகா குஷியில் உள்ளார்.
நடிப்புக்கு பயிற்சி
சமீப நாட்களாக செலிபிரிட்டிகள் டைவர்ஸ் செய்து கொள்வது, சகஜமாகிவிட்டது. குடும்ப நல நீதிமன்றத்தில் தென்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவும், அவரது மனைவி மிலனா நாகராஜும் குடும்ப நல நீதிமன்றத்தில் நின்றிருந்த போட்டோ வைரலானது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களும் டைவர்ஸ் செய்து கொள்கின்றனரா என கேள்வி எழுந்தது. கிருஷ்ணா இயக்கத்தில் லவ் காக்டெய்ல் - 3 தயாராகிறது. இதில் சில காட்சிகள் குடும்ப நல நீதிமன்றம் சம்பந்தப்பட்டது. இது தம்பதிகள் இடையே நடக்கும் கதை. எனவே குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, இருவரும் நீதிமன்றத்துக்கு வந்தனராம்.
கதையால் ஆர்வம்
தென்னாப்பிரிக்காவில் கன்னட திரைப்படங்களின் படப்பிடிப்பு நடப்பது, மிகவும் அபூர்வம். தற்போது இயக்கும் கொனார்க் திரைப்பட முதற்கட்ட படப் பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பின் மும்பை, கோவா, கார்வார், ஹொன்னாவரா, பெங்களூரு, மைசூரு உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில் தனுஷ் மற்றும் பால்குனி கன்னா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர், பால்குனி கன்னா டில்லியை சேர்ந்தவர். ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார். படத்தின் கதை பிடித்ததால், கன்னடத்தில் நடிக்க சம்மதித்தார்.
சாலையில் ஆட்டம்
நடிகை நிவேதிதா கவுடா, கணவர் சந்தன் ஷெட்டியை விவாகரத்து செய்த பின், ஒன்றன் பின் ஒன்றாக திரைப்படங்களில் நடிக்கிறார். தன் மாஜி கணவர் சந்தன் ஷெட்டிக்கு ஜோடியாக, முத்து ராக்ஷசி என்ற படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இவர் நடிப்பில், ஜி.எஸ்.டி., படமும் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே நியூயார்க் நகரில் உல்லாசமாக பொழுதுபோக்குகிறார். அங்குள்ள சாலை ஒன்றில் கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவியுள்ளது.