/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி கொலை வழக்கில் சி.ஐ.டி., விசாரணை தீவிரம்
/
சிறுமி கொலை வழக்கில் சி.ஐ.டி., விசாரணை தீவிரம்
ADDED : ஏப் 17, 2025 06:48 AM

ஹூப்பள்ளி : சிறுமி கொலை வழக்கில் சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஹூப்பள்ளியில், 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியான பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ் குமார், 35, போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்த என்கவுன்டர் குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதனால், வழக்கை சி.ஐ.டி., போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் ஹூப்பள்ளிக்கு சென்றனர்.
அவர்கள், போலீசாரிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பெற்றனர். இதையடுத்து, சிறுமி கொலை செய்யப்பட்ட பகுதி, என்கவுன்டர் நடந்த இடம், பிணவறை என அனைத்து இடங்களுக்கும் சென்று சோதனை நடத்தினர்.
மேலும், குற்றவாளி ரித்தேஷின் உடலை பிரதே பரிசோதனை செய்யும் போது, சி.ஐ.டி., அதிகாரிகளும் உடன் இருந்தனர். அவரது உடலை கேட்டு குடும்ப உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதனால், அவரது புகைப்படம் பீஹாரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உடலை கேட்டு யாரும் வரவில்லை எனில் சில தினங்களுக்கு பின் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தற்போது, சி.ஐ.டி., அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாகவும், சிறுமி கொலை குறித்த அறியப்படாத பல விபரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.