திரையில் சிகரெட் பிடிக்கும் நடிகர்கள்: சுகாதார துறை அமைச்சர் காதர் கவலை
திரையில் சிகரெட் பிடிக்கும் நடிகர்கள்: சுகாதார துறை அமைச்சர் காதர் கவலை
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 08:34 PM

பெங்களூரு: ‘‘திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து, இளைஞர்கள் வழிதவறி செல்லக்கூடாது,’’ என, சுகாதார துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.
பெங்களூரு ஆரோக்கிய சவுதாவில் நேற்று நடந்த, ‘புகையில்லா இளைஞர் இயக்கம் 4.0’ திட்டத்தை நேற்று அமைச்சர் காதர் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தொலைக்காட்சி, திரைப்படங்களில் ‘போஸ்’ கொடுப்பதற்காகவே நடிகர்கள் சிகரெட்டுகளை பிடித்தபடி நிற்கின்றனர். இதை பார்த்து இளைஞர்கள், சிகரெட் பிடிக்கக்கூடாது.
திரையில் நடிகர்கள் செய்வதை போல, இளைஞர்களும் புகை பிடிக்க தொடங்கினால், எதிர்காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.
இதுபோன்று தீய பழக்கங்களை, திரைப்பட நடிகர்களை பற்றி கற்றுக்கொள்ளாதீர்கள்.
இவ்வாறு பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு பேசவில்லை. இங்கு எந்த நடிகரும் அவ்வாறு செய்வதில்லை. இருப்பினும், ஆங்கில திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில், சில சமயங்களில், பிரபலங்கள் புகையிலை பயன்படுத்தும் காட்சிகளில் நடிக்கின்றனர். இதை பார்க்கும் இளைஞர்கள், அதே போல நடக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
