/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிருஷ்ணா நதி நீரில் கர்நாடக பங்கு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
/
கிருஷ்ணா நதி நீரில் கர்நாடக பங்கு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
கிருஷ்ணா நதி நீரில் கர்நாடக பங்கு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
கிருஷ்ணா நதி நீரில் கர்நாடக பங்கு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : மே 04, 2025 12:23 AM

பெங்களூரு: “கிருஷ்ணா நதி நீரில் கர்நாடகாவின் பங்கைப் பெற, அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்,” என, முதல்வர் சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முக்கிய நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, மத்திய ஜல்சக்தி அமைச்சகம், அந்தந்த மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அப்போது வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில், 'காவேரி' இல்லத்தில் நேற்று அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
கிருஷ்ணா நதி நீர் விவகாரம் குறித்தும், தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்க, விரைவில் அனைத்து கட்சிகள் கூட்டம் அழைக்கப்படும்.
கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் அறிவிக்கவும், இதுகுறித்து 2011 செப்டம்பர் 16ம் தேதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கோரி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழ் எல்லைக்கு உட்பட்டதாகும். இதுகுறித்து பல முறை வேண்டுகோள் விடுத்தும், அரசிதழில் வெளியிடவில்லை.
இறுதி தீர்ப்பு வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. கர்நாடகாவின் வட மாவட்டங்களின் விவசாயிகள், தங்களின் பங்கு நீரை பயன்படுத்த பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
காவிரி நதி நீர் விவகார தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தொடர்பாக, சிவில் மேல் முறையீடுகள் பாக்கி இருக்கும்போதே, காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் மஹதாயி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் அறிவிக்கும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று கிருஷ்ணா தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பையும், அரசிதழிலில் வெளியிடும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கிருஷ்ணா தீர்ப்பாய இறுதி தீர்ப்பில், கர்நாடகாவுக்கு 173 டி.எம்.சி., தண்ணீர் பகிர்ந்தளித்துள்ளது. இதில் கிருஷ்ணா மேலணை திட்டத்தின் மூன்றாவது கட்டத்துக்கு, 130 டி.எம்.சி., தண்ணீர் நிர்ணயித்துள்ளது. தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவின் பங்கு நீரை பெற, நீர்ப்பாசன துறை அதிகாரிகள், அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

