/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவி விவகாரம் சித்து, சிவா திடீர் டில்லி பயணம்
/
முதல்வர் பதவி விவகாரம் சித்து, சிவா திடீர் டில்லி பயணம்
முதல்வர் பதவி விவகாரம் சித்து, சிவா திடீர் டில்லி பயணம்
முதல்வர் பதவி விவகாரம் சித்து, சிவா திடீர் டில்லி பயணம்
ADDED : ஜூலை 09, 2025 06:33 AM
காங்கிரஸ் மேலிடம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, முதல்வர் பதவியை வரும் நவம்பரில் சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும் என, காங்., வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் ஐந்து ஆண்டுகளும் முதல்வராக பதவியில் இருக்க வேண்டும் என்று சித்தராமையா ஆசைப்படுகிறார். காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும் முதல்வர் பதவியை பிடிக்க, கட்சி மேலிட தலைவர்கள் வாயிலாக சோனியா, ராகுலுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஆலோசனை
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமா அல்லது அவரையே நீடிக்க வைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார்.
பழைய மைசூரு மண்டலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தையும் கேட்டுப் பெற்றார். தற்போது இரண்டாவது சுற்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
பழைய மைசூரு மண்டலம் ம.ஜ.த., கோட்டையாக உள்ளது. இங்கு தேவகவுடா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தற்போது இப்பகுதியில் சிவகுமார், 'பவர்புல்' தலைவராக உருவெடுத்து வருகிறார்.
ஒக்கலிகர்
சிவகுமார் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் தான், 2023 தேர்தலில் காங்கிரசை, ஒக்கலிகர் சமூகம் முழுமையாக ஆதரித்தது. ஒக்கலிகர் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களும் சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
இதுபோல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் என்ற போர்வையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள சித்தராமையா முயற்சித்து வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூக தலைவராக இருப்பதால் சித்தராமையா மீது கை வைக்க கட்சி மேலிடமும் பயப்படுகிறது.
திண்டாட்டம்
ஒருவேளை இவரை வலுக்கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டால், அதன் பின் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா என்பதும் சந்தேகம் தான்.
சித்தராமையா என்ன சொன்னாலும் அப்படியே செய்வதற்கு காங்கிரசில் சிலர் உள்ளனர். தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்யும்படி அவர் உத்தரவிட்டால் திண்டாட்டம் தான். இதனால் மேலிடம் தீவிரமாக யோசித்து வருகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையிலான முதல்வர் பதவி போட்டியால், மாநிலத்தில் எந்த மேம்பாட்டுப் பணிகளும் நடக்கவில்லை என்பதும் கட்சி மேலிடம் கவனத்திற்கு சென்றுள்ளது.
படுதோல்வி
இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்திப்போம் என்ற பயம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தெலுங்கானா, கர்நாடகாவில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கேயும் பிடியை விட்டுவிட்டால் அவ்வளவு தான் என்ற நிலையில் தான் அக்கட்சி உள்ளது.
இதனால் கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மேலிட தலைவர்கள், முதல்வர் பதவி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துள்ளனர்.
மக்கள் தலைவர்
முதல்வர் பதவி விவகாரம் குறித்து விவாதிக்க டில்லி வரும்படி சித்தராமையா, சிவகுமாருக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. சிவகுமார் நேற்று டில்லி சென்றார். சித்தராமையா இன்று செல்கிறார்.
இந்த திடீர் பயணம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியது:
சிவகுமார் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளது. ஒருவேளை அவருக்கு முதல்வர் பதவி கிடைத்து ஏதாவது வழக்கில் கைது செய்யப்பட்டால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். இதை மேலிடம் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது.
சித்தராமையா மீது முடா முறைகேடு இருந்தாலும் அவர் எப்படியாவது தப்பித்து விடுவார் என்ற நினைப்பில் மேலிடம் உள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் சிறப்பாக அமல்படுத்தி வருகிறார் என்ற பெயரும், கட்சி மேலிடத்திடம் உள்ளது. இதனால் அவரையே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிக்க வைக்கலாம் என்று மேலிடம் நினைக்கிறது.
5 ஆண்டுகள்
இது பற்றி பேச சிவகுமாரை டில்லி அழைத்துள்ளனர். கட்சியின் தலைவராக நீங்களே இருந்து கொள்ளுங்கள். கட்சியை சிறப்பான முறையில் கட்டமைத்து வருகிறீர்கள். சித்தராமையா 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்கட்டும். அடுத்த தேர்தலில் உங்கள் தலைமையின் கீழ் கட்சி வெற்றி பெற்றால், உங்களை முதல்வர் ஆக்குகிறோம் என்று வாக்குறுதி அளிக்கவும் வாய்ப்புள்ளது.
சித்தராமையா மக்கள் தலைவர். அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து செல்லும் திறமை அவருக்கு உண்டு. ஆனால் சிவகுமாருக்கு அத்தகைய திறமை இல்லை. இதுகூட அவருக்கு பதவி கிடைக்காமல் போக ஒரு காரணமாக அமையலாம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -