வறட்சி நிவாரணமாக ரூ.7,143 கோடி மத்திய ஆய்வு குழுவிடம் முதல்வர் கோரிக்கை
வறட்சி நிவாரணமாக ரூ.7,143 கோடி மத்திய ஆய்வு குழுவிடம் முதல்வர் கோரிக்கை
UPDATED : அக் 04, 2026 02:51 AM
ADDED : அக் 03, 2026 11:34 PM

பெங்களூரு: ''தேசிய வறட்சி நிவாரண நிதியத்தின் விதிமுறைகளின்படி, மாநிலத்திற்கு 7,142.64 ரூபாய் கோடி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,'' என, மத்திய வறட்சி ஆய்வு குழுவினரிடம், முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணை செயலர் அஜித்குமார் சாஹு தலைமையில் மத்திய குழுவினர் நேற்று பெங்களூரு வந்தனர்.
இவர்கள் பெங்களூரில் முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வரை சந்தித்தனர்.
அப்போது நடந்த கூட்டத்தில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
கர்நாடகாவில் கடும் வறட்சி சூழல் ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள், சாமானிய மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். என்.டி.ஆர்.எப்., எனும் தேசிய வறட்சி நிவாரண படை விதிமுறைகளின்படி, மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக, 7,142.64 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
ரூ.46,324 கோடி
மாநிலத்தில் உள்ள 240 தாலுகாக்களில் 217 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 177 தாலுகாக்களில், 46,324.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு முதல் கட்டத்தில், 101 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்து, வறட்சி நிவாரணமாக 3,701 கோடி ரூபாயை கோரியிருந்தது.
தற்போது, திருத்தப்பட்ட பட்டியலில், வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 177 தாலுகாக்களுக்கு, 7,142.64 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் வறுமையில் வாடினால், அனைத்தும் முடங்கி விடும். எனவே, விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
மாநிலத்தில் கிருஷ்ணா நீர்பிடிப்பு பகுதியை தவிர, மற்ற அனைத்து அணைகளிலும் நீர்வரத்து குறைவாக உள்ளது. மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் கடும் மழை பற்றாக்குறை நிலவுகிறது.
கோ
இருப்பினும், காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்துவிட மத்திய நீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நகர் புறங்களிலும் தண்ணீர் பிரச்னை உள்ளது. விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து மேலும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். கரும்பு விவசாயிகள் அதிக விலை கோருகின்றனர். அதுபோன்று பால் உற்பத்தியாளர்களும் குறைந்தபட்சம் 10 ரூபாய் விலை உயர்வு கோருகின்றனர். இந்த சவாலான சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து மத்திய ஆய்வு குழு தலைவர் அஜித் குமார் சாஹு கூறுகையில், ''நிலைமையை புரிந்து கொள்வதற்கும், மாநில அரசு அதிகாரிகளிடம் இருந்து தரவுகளை பெறுவதற்கும், மூன்று நாட்கள் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு தொலைநோக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.
