கே.பி.எஸ்.சி.,க்கு புது தோற்றம் முதல்வர் சிவகுமார் உறுதி
கே.பி.எஸ்.சி.,க்கு புது தோற்றம் முதல்வர் சிவகுமார் உறுதி
UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 10:54 PM
பெங்களூரு: கே.பி.எஸ்.சி.,க்கு புது தோற்றம் அளிக்க அரசு முயற்சி செய்வதாக, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை வெளியே கொண்டு வரவே, தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவரிடம் விசாரணையை தொடர அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அங்கு நடந்த முறைகேடுகள் குறித்த சில விஷயங்கள், எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. அமலாக்கத்துறை, சி.ஐ.டி., போலீசார் இணைந்து விசாரித்ததில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு அரசு தேர்வுக்கு படிப்போருக்கு வேலை கிடைக்காமல் தடுக்கும் வகையில், தேர்வில் முறைகேடுகள் நடப்பதை அனுமதிக்க முடியாது.
கே.பி.எஸ்.சி.,க்கு புதிய தோற்றம் அளிக்க அரசு முயற்சி செய்கிறது. கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர, சுகாதார துறை அமைச்சர் காதர் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைத்துள்ளோம். அந்த குழு, அரசுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கும்.
கரும்புக்கான கொள்முதல் விலையை, ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் வரை உயர்த்த கோரி, வட மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் போராடுகின்றனர்.
நாளை பெலகாவியில் கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அனைத்து அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை கலந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
