178 தாலுகாக்களுக்கு கூடுதலாக தலா ரூ.1 கோடி அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் உத்தரவு
178 தாலுகாக்களுக்கு கூடுதலாக தலா ரூ.1 கோடி அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் உத்தரவு
ADDED : ஜூலை 19, 2026 11:26 PM

பெங்களூரு: ''மழை பற்றாக்குறை உள்ள, 178 தாலுகாக்களுக்கு கூடுதலாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தலைமை செயல் அதிகாரிகளுடன் காணொளி மூலம் முதல்வர் சிவ குமார், துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது முதல்வர் பேசியதாவது:
மாநிலத்தில் 178 தாலுகாக்களில் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும், குடிநீருக்காக கூடுதலாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
மழையின் அளவு, அணையில் தேங்கி உள்ள நீரின் அளவை பொறுத்து, விவசாய பணிகள் தொடர வேண்டும். கலெக்டர்கள், மாவட்ட தலைமை செயல் அதிகாரிகள் விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
அடுத்த, 15 நாட்களுக்குள் வறட்சி நிலவரம் குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும்.
புதிய ஆழ்துளை கிணறுகள் தோண்டும்போது, அதை காணொளியாக பதிவு செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டதாக யாராவது கூறினால், அதை நம்பாதீர்கள்.
அவ்வாறு கிணறு தோண்டாமல் தோண்டப்பட்டதாக கூறியதை கண்டுபிடித்தால், அதற்கு கலெக்டர்களே பொறுப்பாவர்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன், அனுபவம், செயல் திறனை வெளிப்படுத்துங்கள். நிர்வாக ரீதியாக குழு பணியை வெளிப்படுத்துங்கள். காகிதத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தால் ஏற்கமாட்டேன். எனக்கு கள அறிக்கை தான் வேண்டும். எனக்கு கிடைக்கும் அறிக்கைக்கும், நீங்கள் கொடுக்கும் அறிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இருக்க கூடாது.
நான் ஏற்கனவே பெலகாவி, கலபுரகியில் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அங்கு நான் வழங்கிய அறிவுறுத்தல்கள் காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
