ADDED : ஜூலை 19, 2026 11:27 PM

பெங்களூரு: ' 'என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி வெற்றி பெறாது,'' என, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் தெரிவித்தார்.
பெங்களூரில் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் முடிவு செய்ய வேண்டும். 140 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலை பிரதமராக்க வேண்டும். மாநிலத்தில் விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகின்றன.
ராகுலை மாநிலத்துக்கு வந்து பிரசாரத்தில் பங்கேற்கும்படி கேட்டுள்ளோம். அவர் விரைவில் எங்களுக்கு தெரிவிப்பார். என்னை அரசியல் ரீதியாக ஒழித்துகட்ட தீட்டப்பட்ட சதி வெற்றி பெறாது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வுகளால் மாணவர்களின் தொடர் தற்கொலையை அடுத்து, 'சத்ரோன்கி கூஞ்ச் எனும் மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். நாட்டில், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
சாதாரண மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. பா.ஜ., அரசு இருக்கும் இடங்களில் தான் இவை நடக்கின்றன. இதன் மூலம் பா.ஜ., தலைவர்களின் பிள்ளைகள் பயனடைகின்றனர். ராஜஸ்தான், குஜராத் என அனைத்து இடங்களிலும் இது நடக்கிறது.
பா.ஜ.,வின் பிள்ளைகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
இந்தியாவில் கல்வி முறை சிறப்பாக இருந்தது. நேரு, 550 பல்கலைக்கழகங்களை கொண்டு வந்தார். அவை அனைத்தும் நேருவின் தொலைநோக்கு பார்வையில் இருந்து உருவானவை.
அவர், மாணவர்களின் எதிர்காலத்தை கட்டமைக்க பாடுபட்டார். ஆனால் இன்று, கல்வி முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பட்டம் கூட படிக்கவில்லை. அவர் போலி சான்றிதழ் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் இடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
