மாண்டியாவில் குமாரசாமி செல்வாக்கு குறைக்க முதல்வர் சிவகுமார் வியூகம்
மாண்டியாவில் குமாரசாமி செல்வாக்கு குறைக்க முதல்வர் சிவகுமார் வியூகம்
UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 10:14 PM
மாண்டியா: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் லோக்ச பா தொகுதியான மாண்டியாவில், பெரிய அளவில் விழா நடத்தி, பணிகளை துவக்கி வைப்பதன் மூலம், அவரது செல்வாக்கை குறைக்க, முதல்வர் சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.
காங்., கட்சியை சேர்ந்த முதல்வர் சிவகுமாருக்கும், ம.ஜ.த.,வை சேர்ந்த மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமிக்கும் இடையில், பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. ஒக்கலிகர் சமூகத்தின் பெரும் தலைவர்களான இவர்கள் இருவரில் யார் பெரியவர் என்ற, ‘ஈகோ’ மோதல் இன்றும் தொடர்கிறது.
இதற்கு முன் ராம்நகர் மாவட்ட அரசியலில், குமாரசாமிக்கும், சிவகுமாருக்கும் மோதல் இருந்தது. இம்மாவட்டத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க, இருவருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. சிவகுமார் முதல்வரான பின், அவரது பார்வை, மத்திய அமைச்சர் குமாரசாமியின் தொகுதியான மாண்டியா மீது பதிந்துள்ளது.
பெங்களூரை போன்று, மாண்டியாவில் தொழில்களை வளர்க்க வேண்டும் என்பது, குமாரசாமியின் விருப்பமாகும். தொழிலதிபர்கள் தொழிற்சாலை அமைக்க இடம் வழங்கும்படி, சில நாட்களுக்கு முன், முதல்வர் சிவகுமாருக்கு குமாரசாமி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு முதல்வர் இன்னும் பதில் அளிக்கவில்லை.
சமீப நாட்களாக பல விஷயங்களை மு ன் வைத்து போராட்டம் நடத்தும் குமாரசாமி, சிவகுமார் அரசை நெருக்கடியில் சிக்க வைக்கிறார். இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான பா.ஜ.,வை விட, குமாரசாமியே அரசுக்கு அதிகமான குடைச்சல் கொடுக்கிறார். இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளாகும் சிவகுமார், குமாரசாமியின் செல் வாக்கை சரிய வைக்க, திரைமறைவில் திட்டம் வகுக்கிறார்.
குமாரசாமி மீதான நில மறு அறிவிப்பு வழக்கில் விசாரணை நடத்த, அரசு சார்பில் சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே மாண்டியாவில், தொழிலை முன்னேற்ற குமாரசாமி ஆர்வம் காட்டும் நிலையில், அம்மாவட்டத்தில் அவசர அவசரமாக வளர்ச்சி பணிகளை துவக்க, முதல்வர் சி வகுமார் தயாராகிறார்.
மாண்டியாவில் வரும் 31ம் தேதி பிரமாண்ட அரசு விழா நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் சிவகுமார், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். இ தன் மூலம் மாண்டியா மாவட்ட முன்னேற்றத்தில், அரசு அக்கறை காட்டுகிறது. மத்திய அமைச்சர் குமாரசாமியின் பங்களிப்பு பூஜ்யம் என்பதை, மக்களுக்கு காட்ட வேண்டும் என்பது, முதல்வரின் எண்ணமாகும்.
