ADDED : செப் 20, 2026 11:25 PM

ஹாசன்: ' 'மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான, கஸ்துாரிரங்கன் ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்த, அனைத்து கட்சி குழுவுடன், பிரதமர் மோடியை சந்திப்பேன்,'' என, முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
ஹா சன் மாவட்டம், சக்லேஷ்பூர் தாலுகா பொதுமக்கள், விவசாயிகளுடன், முதல்வர் சிவகுமார் நேற்று கலந்துரையாடினார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான, கஸ்துாரிரங்கன் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக விவாதித்தார்.
அப்போது விவசாயிகள் பேசுகையில், 'கஸ்துாரி ரங்கன் ஆணைய அறிக்கை அறிவியல்பூர்வமற்றது. அறிக்கை அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும்.
'எங்களை கஸ்துாரிரங்கன் ஆணையத்தினர் சந்திக்கவே இல்லை. சாட்டிலைட் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இந்த அறிக்கையை விவசாயிகளுக்கு மரண தண்டனை. இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்றனர்.
பின், அவர்கள் மத்தியில் சிவகுமார் பேசியதாவது:
கஸ்துாரிரங்கன் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுடன் ஆலோசித்து உள்ளேன். இந்த அறிக்கை தொடர்பாக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சட்டசபையிலும் விவாதிக்க உள்ளோம். அறிக்கை தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, வரும் 27ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளது.
சித்தராமையா முதல்வராக இருந்த போது அறிக்கையை நாங்கள் நிராகரித்தோம். விவசாயிகள் நலன்களை பாதுகாப்போம். கஸ்துாரி ரங்கன் ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்த, அனைத்து கட்சி குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
