/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜமீர், பி.ஆர்.பாட்டீல், ராஜு காகேவுக்கு 'டோஸ்' விட்ட முதல்வர் சித்தராமையா
/
ஜமீர், பி.ஆர்.பாட்டீல், ராஜு காகேவுக்கு 'டோஸ்' விட்ட முதல்வர் சித்தராமையா
ஜமீர், பி.ஆர்.பாட்டீல், ராஜு காகேவுக்கு 'டோஸ்' விட்ட முதல்வர் சித்தராமையா
ஜமீர், பி.ஆர்.பாட்டீல், ராஜு காகேவுக்கு 'டோஸ்' விட்ட முதல்வர் சித்தராமையா
ADDED : ஜூன் 26, 2025 11:12 PM

பெங்களூரு:அமைச்சர் ஜமீர் அகமது கான், எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.பாட்டீல், ராஜு காகேவுக்கு, முதல்வர் சித்தராமையா 'டோஸ்' விட்டுள்ளார்.
வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கானின் உதவியாளர் சர்ப்ராஸ் கானுடன், கலபுரகி ஆலந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. லஞ்சம் வாங்கிக் கொண்டு வீடுகள் ஒதுக்கப்படுவதாக, பி.ஆர்.பாட்டீல் பேசி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோல பெலகாவி காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே, தன் தொகுதியில் நடக்க வேண்டிய பணிக்கு, பணி ஆணை வராதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறினார். இவற்றை வைத்து பா.ஜ., அரசியல் செய்தது.
இதற்கிடையில் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்த முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு பெங்களூரு திரும்பினார். காவிரி அரசு இல்லத்தில் சித்தராமையாவை, பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்தனர்.
இருவரிடமும் குறைகளை கேட்டறிந்த முதல்வர், 'உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் நேரடியாக என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். ஊடகங்கள் முன்பும், மொபைல் போனிலும் பேசுவது ஏன்? உங்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது' என்று கூறி, செம டோஸ் விட்டு உள்ளார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் ராஜு காகே, ஊடகத்தினரை சந்திக்காமல் சென்று விட்டார்.
பி.ஆர்.பாட்டீல் அளித்த பேட்டியில், “முதல்வரை சந்தித்து என் பிரச்னையை கூறி உள்ளேன். நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேன். இனி முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் தான். யோசித்து முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்,” என்றார்.
நேற்று காலை சித்தராமையாவை, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான் சந்தித்தார். வீட்டு வசதி துறையில் லஞ்சம் வாங்கப்படுவதாக, பி.ஆர்.பாட்டீல் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
'வீட்டு வசதி துறையின் அமைச்சரான நீங்கள், உங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். இனி இதுபோன்ற குற்றச்சாட்டு வர கூடாது' என, ஜமீருக்கும் முதல்வர் டோஸ் விட்டுள்ளார்.
இதையடுத்து ஜமீர் அளித்த பேட்டி:
முதல்வரை சந்தித்து என் துறையில் என்ன நடந்தது என்று விவரித்துள்ளேன். என் மீது பி.ஆர்.பாட்டீல் நேரடியாக எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. ஊடகங்கள் தான், என் பெயரை கூறின. தன் தொகுதிக்கு 6,000 வீடுகளை பி.ஆர்.பாட்டீல் கேட்டார். நாங்கள் 900 வீடுகள் கொடுத்துள்ளோம். மீதம் உள்ள வீடுகளை விரைவில் கொடுப்போம்.
எங்களுக்கு மேலிடம் உள்ளது. அங்கு உள்ள தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். யாராக இருந்தாலும் கட்சி முடிவை மதித்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.