/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரபிக்கடலில் 11 நாட்கள் 31 மீனவர்கள் தவிப்பு; பத்திரமாக மீட்ட கடலோர பாதுகாப்பு படை

ADDED : அக் 27, 2025 03:57 AM

தட்சிண கன்னடா: கடலில் 11 நாட்கள் தத்தளித்த கோவாவை சேர்ந்த 31 மீனவர்களை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவாவை சேர்ந்த 31 மீனவர்கள், 'ஐ.எப்.பி., சான்ட் ஆந்டான் - 1' மீன்பிடி படகில் 15 நாட்களுக்கு முன், மீன் பிடிக்க அரபிக் கடலுக்கு சென்றனர். 11 நாட்களுக்கு முன், அவர்களின் படகு பழுதடைந்தது.
கரையில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவர்களின் குடும்பத்தினர், இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு, அக்., 24ல் தகவல் தெரிவித்தனர்.
வானிலை மோசமாக இருந்த போதிலும், மீனவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கொச்சியில் இருந்து, கடற்பகுதியை கண்காணிக்கும் விமானம் வரவழைக்கப்பட்டது. அவர்களும் கடலில் மீனவர்களை தேடி வந்தனர்.
கடைசியாக மீனவர்கள் தொடர்பு கொண்ட அலைவரிசையை கணக்கில் கொண்டு, அக்., 25ல் மங்களூரு துறைமுகத்தில் இருந்து 100 நாட்டிகல் மைல் தொலைவில் இருப்பதை உறுதி செய்தனர்.
கடலோர பாதுகாப்பு படையினர், தொழில்நுட்ப வல்லுனர்களுடன் அங்கு சென்றனர். மீனவர்கள் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
உயிர் பயத்தில் இருந்த மீனவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான உணவு வழங்கினர்.
பின், பழுதான படகு சரி செய்யப்பட்டு, பாதுகாப்புடன் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
தங்களை பத்திரமாக மீட்ட அனைவருக்கும், மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.