
கன்னடத்தில் குழந்தைகள் திரைப்படங்கள் அவ்வப்போது திரைக்கு வருகின்றன. தற்போது 'பப்பி' திரைப்படம், மே 1ம் தேதி திரைக்கு வந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு சிறுவர்கள் மற்றும் நாயை சுற்றிலும் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பேசப்படும் கன்னடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நடித்த பலரும் வட மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தங்களின் வாழ்க்கைக்காக சிறுவர்கள் போராடும் கதையாகும்.
திரையுலகுக்கு வரும் புதுமுக நடிகையர், ஒரு படத்தில் நடித்த பின், அடுத்த வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டி வரும். சில நடிகையருக்கு உடனடியாக வாய்ப்புகள் குவியும். இத்தகைய அதிர்ஷ்டசாலி நடிகைகளில், பிருந்தா ஆச்சார்யாவும் ஒருவர். 'பிரேமம் பூஜ்யம்' படத்தில், நடிகர் பிரேமுக்கு ஜோடியாக அறிமுகமான பிருந்தா ஆச்சார்யா, தற்போது 'மாருதா', 'எக்ஸ் அண்ட் ஒய்' உட்பட, ஐந்து படங்களை கையில் வைத்துள்ளார். ஐந்தும் நடப்பாண்டே திரைக்கு வரவுள்ளன. திரையுலகம் தன்னை கைவிடவில்லை என்ற மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
பொதுவாக திரையுலகில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைப்பது அரிது. நேரம், காலம் பார்க்காமல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி வரும். ஒன்றிரண்டு வாரம் பிரேக் கிடைத்தாலும், வெளிநாட்டுக்கு பறப்பர். நடிகை மேகா ஷெட்டிக்கும், பட வேலைகளில் இருந்து விடுமுறை கிடைத்ததால், சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி, ஜாலியாக பொழுதை கழிக்கிறார். ஸ்டைலிஷ் போட்டோக்களை எடுத்து, சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். இவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன என்றாலும், வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை.
கன்னட திரை நட்சத்திரங்கள் வசிஷ்டா சிம்ஹா, ஹரிப்பிரியா 2023 ஜனவரி 26ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் ஹரிப்பிரியா நடிப்பை குறைத்துக் கொண்டார். கருவுற்ற இவருக்கு நடப்பாண்டு ஜனவரி 26ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணமான அதே மாதம், அதே தேதியில் குழந்தை பிறந்ததால், தம்பதி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். ஹரிப்பிரியா மகனை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார். மகனுக்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மகனுடன் கருப்பு, வெள்ளை படத்தை வெளியிட்டுள்ளனர். பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது. பலர் பலியாகினர். இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதே இடத்தில் தான் நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்ட்டின்' படப்பிடிப்பு நடந்தது. அப்போது பலத்த பாதுகாப்பு இருந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த அபாயமும் இல்லாமல், படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, பெங்களூரு திரும்பினர். படப்பிடிப்பு நடந்த அந்த இடத்தில், தற்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி காஷ்மீரில் எந்த படப்பிடிப்பும் நடப்பது சந்தேகம் தான்.
கன்னடத்தில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள், அவ்வப்போது திரைக்கு வருகிறது. இந்த பட்டியலில் 'கோரா'வையும் சேர்க்கலாம். காட்டில் வசிக்கும் அப்பாவி மக்களை, பணக்கார வில்லன் கொத்தடிமையாக நடத்துகிறார். அவர்களை மிருகத்தனமாக தாக்கி இம்சிக்கிறார். இதை கண்டு பொறுமை இழந்த கோரா என்ற இளைஞர், அப்பாவிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார். இவரது போராட்டம் வெற்றி அடைந்ததா, கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், 'கோரா' படத்தை பார்க்க வேண்டும். அடர்த்தியான வனம், பசுமையான எஸ்டேட், இயற்கை நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

