
இரட்டை குழந்தைகள்
ஒன்றிரண்டு படங்களில் நடித்த இளம் நடிகையரே, திருமணம் செய்து செட்டிலாகின்றனர். ஆனால் நடிகை பாவனா ராமண்ணா, 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்ன காரணத்தாலோ திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் தாய்மையை உணர வேண்டும் என, விரும்பினார். எனவே ஐ.வி.எப்., மூலமாக கர்ப்பம் தரித்துள்ளார். அவரது கருவில் இரட்டை குழந்தைகள் உள்ளதால், மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். விரைவில், தான் தாயாகும் விஷயத்தை, சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். நிறைமாதமாக நிற்கும் தன் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
பிக் பட்ஜெட்
நடிகர் துருவா சர்ஜா, கே.டி., திரைப்படத்துக்கு பின், அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர் பல கதைகளை கேட்டு வருகிறார். தற்போது கிடைத்த தகவலின்படி, துருவா சர்ஜா மூன்று படங்களை ஒப்புக்கொண்டுள்ளார். மூன்றுமே பிக் பட்ஜெட் படங்களாகும். பிரபலமான இயக்குநர்களுக்கு அவர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இயக்குநர் ராஜகுரு, துருவா சர்ஜாவுக்காகவே சிறப்பான கதையை தயார் செய்துள்ளார். அவருக்கும் கதை பிடித்ததால், நடிக்க சம்மதித்தார். பாலிவுட்டின் பிரபலமான படக்கம்பெனி ஒன்று, துருவா சர்ஜா படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாம்.
பெரும் எதிர்பார்ப்பு
நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா அருண்குமார், தன் சொந்த படக்கம்பெனி மூலம், முதன் முறையாக தயாரித்துள்ள கொத்தலவாடி திரைப்படம், ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வருகிறது. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சமாதிக்கு பூஜை செய்து, படப்பிரசாரத்தை படக்குழுவினர் துவக்கினர். பிருத்வி ஆம்பர் நாயகன்; இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை காவ்யா ஷைவா நடித்துள்ளனர். இதுவரை சாக்லேட் ஹீரோவாக இருந்த பிருத்வி ஆம்பர், முதன் முறையாக மாஸ் ஹீரோவாக மாறி உள்ளார். பிரபல நடிகரின் தாயார் தயாரிக்கும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளமை மாறாத மாதவி
கன்னடத்தில் ஆகஸ்மிகா, ஜீவன சைத்ரா, அனுராகா அரளிது போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் நடித்த மாதவி, தற்போது என்ன செய்கிறார் என்ற கேள்வி, ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்தவர். இவர் திருமணம் ஆன பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு, அமெரிக்காவின் நியுஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தன் கணவர், மகள்களுடன் உள்ள போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மூன்று மகள்களின் தாய் என்பதை நம்ப முடியாதபடி, மாதவி இளமை மாறாமல் அப்படியே இருப்பதை கண்டு, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
12 ஆண்டுகள் கனவு
நடிகர் திலக், நடிகை பிரியா ஹெக்டே நாயகன், நாயகியாக நடிக்கும் உசிரு திரைப்பட டீசர் சமீபத்தில் வெளியானது. இதை பிரபாகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழில் சில படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர். தனியாக படம் இயக்க வேண்டும் என்பது, இவரது 12 ஆண்டுகள் கனவாகும். இப்போது நிறைவேறியுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி, ஆபத்தில் சிக்கி கொள்கிறார். அவரை கணவர் எப்பிடி காப்பாற்றுகிறார் என்பதே கதையாகும். பெங்களூரு, மடிகேரி, சிக்கமகளூரு, மூடிகெரே சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
வெளியே கசியாத கதை
கவுரவா வெங்கடேஷ் இயக்கும், பைனா திரைப்பட படப்பிடிப்பு, சமீபத்தில் துவங்கியது. இதில் சிராக் சாளுக்யா, மதுஸ்ரீ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை த்ருப்தி மற்றொரு நாயகி. யோகராஜ் பட், சாதுகோகிலா, ரங்காயணா ரகு உட்பட பலர் நடித்துள்ளனர். பைனா என்பது ஒரு குழந்தையின் பெயர். இதில் இருந்தே கதை துவங்குகிறது. ஹாரர், திரில்லர் கதை கொண்டது. கதை வெளியே கசியாமல், படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். பெங்களூரு, சிக்கமகளூரில் படப்பிடிப்பு நடக்கிறது.