கல்லுாரி மாணவி பலாத்காரம்? கேரள வாலிபருக்கு 'சம்மன்'
கல்லுாரி மாணவி பலாத்காரம்? கேரள வாலிபருக்கு 'சம்மன்'
ADDED : மே 21, 2026 10:05 PM
மடிவாளா: கேரள வாலிபர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, கல்லுாரி மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் வாலிபர் மறுத்து உள்ளார். இருவரும் சம்மதித்து உடலுறவு கொண்டதாக கூறி உள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு வாலிபருக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அதுல், கோஷ் ஆகியோர், பெங்களூரு மடிவாளாவில், 'மோமோஸ்' கடை நடத்துகின்றனர். இந்த கடையில் 20 வயது கல்லுாரி மாணவி, பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்காததால், மோமோஸ் கடையை விற்பனை செய்ய, அதுலும், கோஷும் முடிவு செய்தனர். கடையை விற்பனை செய்ய கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஹைனாஸ், 27, என்பவரை அணுகினர்.
கடந்த 11ம் தேதி இரவு அதுல், கோஷ் ஆகியோரை ஹைனாஸ் சந்தித்தார். கடை விற்பனை தொடர்பாக டீலிங் பேசி முடித்த பின், கடைக்குள் வைத்து மது பார்ட்டி நடத்தினர். இதில் கல்லுாரி மாணவியும் கலந்து கொண்டார்.
பார்ட்டி முடிந்ததும் அதுலும், கோஷும் உணவு வாங்க சென்று விட்டனர். கடையில் தனியாக இருந்த மாணவியை, ஹைனாஸ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, ஹைனாஸ் மீது மாணவி, கடந்த 12ம் தேதி, மடிவாளா போலீசில் புகார் செய்தார். மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் எழுந்தது. ஹைனாஸை தொடர்பு கொண்டு பேசினர். அவர் கேரளாவில் இருப்பதாக கூறினார்.
'மாணவியை நான் மிரட்டி பலாத்காரம் செய்யவில்லை; பரஸ்பர சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டோம்' என்று, போலீசாரிடம் தெரிவித்தார். ஆனாலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும்.
