என் வீட்டில் சோதனை செய்ய வரலாம்: மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு
என் வீட்டில் சோதனை செய்ய வரலாம்: மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு
UPDATED : நவ 03, 2026 05:33 AM
ADDED : நவ 02, 2026 10:47 PM

பெங்களூரு: ''என் மீது பல வழக்குகள் இருந்தபோதும், யாரிடமும் சென்று அரசியல் பாதுகாப்பு கோரவில்லை. என் வீட்டில் சோதனை செய்ய வாரன்டுடன் வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறேன்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில், 2023 ஆக., 5, 6ம் தேதிகளில் அப்போது துணை முதல்வராக இருந்த சிவகுமார் வீட்டுக்கு, பிரஜ்வலின் கார் ஓட்டுநரும், 'ஏ2' குற்றவாளியுமான கார்த்திக் சென்ற தகவல் போலீசார் சேகரித்த சி.டி.ஆர்., எனும் அழைப்பு விபர பதிவில் உள்ளது. கார்த்திக் - சிவகுமார் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்.
சித்தராமையாவுக்கு எதிரான ரகசிய விசாரணை வழக்கில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மிரட்டி, பணம் வசூலிக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நோக்கில் விசாரணை நடத்தப்படுகிறது.
அவசர அறிக்கை
சி.சி.பி., விசாரணை அதிகாரி சதீஷ் ஏன் மாற்றப்பட்டார். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அவசர அவசரமாக எதற்காக அறிக்கை அளித்தார்.
'வழக்கு தொடர்பான விஷயத்தை, போலீஸ் அதிகாரிகள் பொது வெளியில் அறிக்கை வெளியிடக்கூடாது' என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டு உள்ளது. அறிக்கை வருவதற்கு முன்னரே, இது புனையப்பட்ட வழக்கு என்று போலீஸ் கூறுவது சரியல்ல. இந்த ரகசிய வீடியோவில் உள்ள பெண்ணிடம் என்ன வாக்குமூலம் பெறப்பட்டது.
எனக்கு தெரியாது
ரகசிய விசாரணை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரித்தேஷ் பாண்டே, யார் என்று எனக்கு தெரியாது.
டில்லியில் உள்ள என் வீட்டுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் வந்திருந்தால், விசாரிக்கலாம்.
மாநிலத்தில் உள்ள 'சிடி' தொழிற்சாலைகள், பல குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன. அவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறியதற்காக நான் குறி வைக்கப்படுகிறேன்.
அமலாக்க துறை, வரு மான வரித்துறை சோதனைகளில் இருந்து தப்பிக்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் பயன்படுத்திக் கொள்வதாக, கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுவது குழந்தைத்தனமானது.
என் மீது பல வழக்குகள் இருந்தபோதும், யாரிடமும் சென்று அரசியல் பாதுகாப்பு கோரவில்லை. என் வீட்டில் சோதனை செய்ய வாரண்டுடன் வந்தால் வரவேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
