பார்கள், பப்களில் திடீர் சோதனை: கமிஷனர் தலைமையில் அதிரடி
பார்கள், பப்களில் திடீர் சோதனை: கமிஷனர் தலைமையில் அதிரடி
UPDATED : அக் 11, 2026 12:39 AM
ADDED : அக் 10, 2026 09:24 PM

பெங்களூரு: பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், நள்ளிரவு 400க்கும் மேற்பட்ட பப்கள், பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் பப்கள், பார்களில் நிர்ணயித்த நேரத்தை தாண்டியும் மது வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதுபோல, சிறு வயதினருக்கு மதுபானம் விற்பதாகவும் புகார் வந்தது.
எனவே, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தலைமையில் இரண்டு இணை போலீஸ் கமிஷனர்கள் உட்பட 19 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் போலீசார் சோதனையில் இறங்கினர்.
பெங்களூரின் பிரிகேட் சாலையில் உள்ள, 'பிரிகேட் கார்டன், பேஜ் 3 உட்பட கோரமங்களா, ஆனந்தராவ் சதுக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் என 400க்கும் மேற்பட்ட பப்கள், பார்களில் சோதனை நடந்தது. நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 2:00 மணி வரை, போலீசாரின் சோதனை நீடித்தது.
நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் அளித்த பேட்டி:
நிர்ணயித்த நேரத்தில் பார்கள், பப்கள் மூடப்படுகிறதா, சிறு வயதினருக்கு மதுபானம் விநியோகிக்கிறதா, விதிகளை பின்பற்றுகின்றனரா என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது.
பார், பப்களை மூட நேர கட்டுப்பாடு உள்ளது. அதன்படி, நடந்து கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், சிறு வயதினருக்கு மதுபானம் வினியோகிக்க கூடாது என, எச்சரித்தோம்.
பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல், பார்கள், பப்கள் செயல்படுகின்றனவா என்பதை, உறுதிப்படுத்துவது எங்களின் குறிக்கோள். அதிகாலை 1:00 மணிக்குள் மதுபான வினியோகத்தை நிறுத்துவது, வாடிக்கையாளர்களை வெளியேற்றுவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்.
மகளிர் பப்களுக்கு லைசென்ஸ் பெற்றுள்ள இடங்களில், சிறு வயதினரை உள்ளே அனுமதிக்கின்றனரா, நடன காட்சிகள் நடத்த லைசென்ஸ் பெற்ற பப்களில், லைசென்ஸ் நிபந்தனைகள் மீறப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
சாலைகளில் செக்போஸ்டுகள் அமைத்து குடிபோதையில் வரும் வாகனம் ஓட்டி வந்தவர்கள், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். விதிமுறைகளை மீறிய பார்கள், பப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
