இளம்பெண் இறப்பில் திருப்பம்: கொலை என பெற்றோர் சந்தேகம்
இளம்பெண் இறப்பில் திருப்பம்: கொலை என பெற்றோர் சந்தேகம்
UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 09:24 PM
ராம்நகர்: பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், விபத்தில் இளம்பெண் இறந்த வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகாவின், சங்கலகெரே அருகில் பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், அக்டோபர் 3ம் தேதியன்று நடந்த சாலை விபத்தில், பெங்களூரின், ராமோஹள்ளியை சேர்ந்த, பூமிகா, 23, என்பவர் உயிரிழந்தார்.
சென்னப்பட்டணா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. ஆனால் பூமிகா விபத்தில் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
புகாரில் கூறியதாவது:
எங்கள் மகள் விபத்தில் இறக்கவில்லை. கிரண் என்பவரை சந்திப்பதற்காக, பூமிகா பெங்களூரில் இருந்து, சென்னப்பட்டணாவுக்கு வந்திருந்தார். இவர்கள் காதலித்துள்ளனர். ஏதோ விஷயத்தில் இவர்களுக்குள், தகராறு நடந்துள்ளது. அப்போது கிரண், தன் சகோதரன் ஆஷித்துடன் சேர்ந்து, பூமிகாவை தாக்கியுள்ளார்.
பூமிகா பெங்களூரில் இருந்து, காரில் வந்தார். அவர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு, பைக்கில் எப்படி வந்தார். பைக்கில் இருந்து இறங்கி, சாலையை கடக்கும் போது கீழே விழுந்த பூமிகாவை விட்டு, கிரண் சென்றது ஏன்?
சண்டை நடந்த போது, பூமிகாவின் கார் சாவியை, கிரண் பறித்து கொண்டார். ஓட்டுநரையும் மிரட்டியுள்ளார். அதன் பின், தன் சகோதரனை வரவழைத்து, பூமிகாவை தாக்கியுள்ளார் என கருதுகிறோம். கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
