எம்.எல்.சி., தேர்தல் தோல்வி: காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
எம்.எல்.சி., தேர்தல் தோல்வி: காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 07:48 PM

பெங்களூரு: ‘‘கர்நாடக எம்.எல்.சி., தேர்தலில் தென் கிழக்கு பட்டதாரி தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, காங்கிரசின் 26 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்,’’ என, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சித்தராமையா டில்லி செல்லும் முன் அவரிடம் பேசினேன். தன்னை பற்றி பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியானது பற்றியும், அதை செய்தவர்கள் பற்றியும் என்னிடம் வருத்தமாக கூறினார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.
ராகுலை சந்தித்த போது, தேர்தலில் பிரசாரம் செய்யவும் வர மாட்டேன் என, சித்தராமையா கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. அவர் பிரசாரத்திற்கு வராவிட்டால் அது கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும்.
சித்தராமையாவை பற்றி பெண் பேசிய வீடியோ வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தர வேண்டும்.
அரசியல்வாதிகளை ரகசிய வீடியோ எடுக்கும், கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் கர்நாடகாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும். சித்தராமையா தொடர்பான வீடியோ வழக்கு தான், எம்.எல்.சி., தேர்தலில் நான்கு இடத்திலும் காங்கிரஸ் தோற்க காரணம்.
தென்கிழக்கு பட்டதாரி எம்.எல்.சி., தொகுதி, 35 எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியை உள்ளடக்கியது. இதில் நான் உட்பட, 26 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளேன். இத்தனை பேர் இருந்தும் வெற்றி பெற முடியாவிட்டால், தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது தான் நல்லது.
ஆளுங்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வருவது இயல்பு தான். இதில் இருந்து மீண்டு வர வேண்டும். எம்.எல்.சி., தேர்தலில் ஓட்டு போட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள். அனைத்து விஷயங்களையும் யோசித்து ஓட்டு போடுபவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
