UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 07:48 PM

கோலார்: காங்., தலைவர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மன்னிப்பு கோரினார்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாவணகெரேவில் கடந்த மாதம் 31ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போது, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்தார்
இது, காங்கிரஸ் தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவ்விஷயத்தில், விஜயேந்திரா மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் பெங்களூரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டினர்.
இதுகுறித்து, விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் கூறியதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவற்றை நான் வேண்டுமென்ற கூறவில்லை. எனது வார்த்தைகளால் காங்கிரஸ் தலைவர்கள் புண்பட்டிருந்தால், காங்., தலைவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக, நான் இதுபோன்று பேசுவதில்லை.
மாநிலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி போராட்டம் நடத்துவதற்காக வீதியில் இறங்கி உள்ளனர். இதனால் தான் நான் கோபமாக பேசி விட்டேன்.
கே.பி.எஸ்.சி., மற்றும் இட ஒதுக்கீடு பிரச்னைகளில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து விட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு பிரச்னை குறித்து, அரசு தரப்பில் முறையாக வாதாடப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர்களுக்கு கவுரவம், சுயமரியாதை இருந்திருந்தால், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை முறையாக வாதாடியிருப்பர். இதனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அநீதி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசு வெற்று விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
