UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 07:48 PM

சித்ரதுர்கா: ‘‘காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்றால், முன்னாள் அமைச்சர் ராஜண்ணா வேறு கட்சிக்கு செல்லட்டும்,’’ என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தென்கிழக்கு பட்டதாரி எம்.எல்.சி., தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, காங்கிரசின், 26 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ராஜண்ணா கூறியுள்ளார்.
எம்.எல்.சி., தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக நேர்மையாக உழைத்தோம் என, ராஜண்ணாவும், அவரது மகனான எம்.எல்.சி., ராஜேந்திராவும் சொல்ல முடியுமா...
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, குமாரசாமியை, ராஜேந்திரா சந்தித்தார். இது ஏதேனும் ரகசிய நடவடிக்கையா என்பது தெரியவில்லை.
காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவியை ராஜண்ணா அனுபவித்துள்ளார். இப்போது அமைச்சராக இல்லை என்றதும், கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்.
காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்றால், அவர் வேறு கட்சிக்கு செல்லட்டும். இங்கு இருந்து கொண்டு தொண்டர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். கட்சி விரோத செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் கட்சிக்கு நல்லது.
ராஜண்ணா, அவரது மகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய விரைவில் மேலிடத்திடம் புகார் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
