புதிய மாநில பா.ஜ., தலைவர் யார் கட்சி முடிவு செய்யும்: ஹரிஷ் திவேதி
புதிய மாநில பா.ஜ., தலைவர் யார் கட்சி முடிவு செய்யும்: ஹரிஷ் திவேதி
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 07:48 PM

– நமது நிருபர் –: ‘‘மாநில பா.ஜ., தலைவர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். இளைஞரான விஜயேந்திரா தலைமையில் தற்போது கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகின்றன,’’ என, கர்நாடக மாநில புதிய மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் திவேதி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இளைஞரான விஜயேந்திரா தலைமையில் தற்போது கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பா.ஜ., தலைவர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். இது, உட்கட்சி விஷயம்.
கர்நாடக மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளேன். நாங்கள் தலைவருடன் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தினோம். அமைப்பு குறித்து விவாதித்தோம்.
கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் தலைமையில் பா.ஜ., சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடியூரப்பாவை சந்தித்து சில வழிகாட்டுதல்களை பெற்றேன்.
காங்கிரசின் தவறான ஆட்சியில் இருந்து மாநிலத்தை விடுவிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கி உள்ளது. இந்த அரசு சாமானிய மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படவில்லை.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே அரசு ஈடுபட்டு உள்ளது. தற்போது, அது பாலின் விலையை பெருமளவில் உயர்த்தி உள்ளது. அவர்கள், ஏழைகளின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள், தங்கள் தலைவர்களான காந்தி குடும்பத்தின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர்.
வரும், 2028ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும் நோக்கில் பணியாற்றுவோம். எஸ்.ஐ.ஆர்., பணிகள் பிரதமர் மோடியின் காலத்தில் மட்டும் நடத்தப்படவில்லை. நேரு, இந்திரா காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இறந்தவர்களின் அடையாள அட்டைகளை சரி செய்வது, இரட்டை அடையாள அட்டைகளை சரி செய்யவே எஸ்.ஐ.ஆர்., செய்யப்படுகிறது.
காங்கிரஸ் தோற்கும்போது, அவர்கள் தங்கள் தவறுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஆனால் காங்கிரஸ் எப்போதும் பா.ஜ., தேர்தல் மின்னணு ஓட்டு இயந்திரம், உச்ச நீதிமன்றம் என அனைத்திற்கும் எதிராகவே பேசுகிறது.
காங்கிரசின் அரசியல் அமைப்பு நிறுவனங்களை ஒருபோதும் மதிப்பதில்லை. காங்கிரசை பொறுத்தவரை, காந்தி குடும்பமே அரசியல் அமைப்பு, உச்ச நீதிமன்றம்.
நாட்டு மக்கள் எப்போதோ காங்கிரசை நிராகரித்து விட்டனர். திரிபுரா, அசாம், கர்நாடகாவில் நடந்த மேல்சபை தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
