/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேலிட பொறுப்பாளரிடம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்! ...: அமைச்சர்கள் மதிப்பதே இல்லை என குற்றச்சாட்டு
/
மேலிட பொறுப்பாளரிடம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்! ...: அமைச்சர்கள் மதிப்பதே இல்லை என குற்றச்சாட்டு
மேலிட பொறுப்பாளரிடம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்! ...: அமைச்சர்கள் மதிப்பதே இல்லை என குற்றச்சாட்டு
மேலிட பொறுப்பாளரிடம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்! ...: அமைச்சர்கள் மதிப்பதே இல்லை என குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 01, 2025 03:41 AM

கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விட, ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே, அமைச்சர்கள் மீது அதிக கோபத்தில் உள்ளனர். தங்களின் சிபாரிசுகளை பொருட்படுத்துவது இல்லை. தங்களை மதிப்பதில்லை என, அவ்வப்போது புலம்புவது வழக்கம். இதுநாள் வரை இலைமறை காயாக இருந்த இவர்களின் கோபம், தற்போது வெடித்து சிதறியுள்ளது.
பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன், ஆலந்தா எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், வீட்டு வசதித்துறையில் ஊழல் நடக்கிறது. ஏழைகளுக்கு வீடுகள் கொடுக்க லஞ்சம் பெறுகின்றனர். நான் செய்த சிபாரிசுகளை ஏற்கவில்லை. கிராம பஞ்சாயத்து தலைவர் லஞ்சம் கொடுத்து, வீடுகள் பெற்றுள்ளார் என, குற்றம்சாட்டினார். இது அரசில் பெரும் சுறாவளியை கிளப்பியது.
அவரை தொடர்ந்து, பலர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகானை, அமைச்சரவையில் இருந்து நீக்கி, புதியவருக்கு வாய்ப்பு தாருங்கள் எனவும், வலியுறுத்தினர். அதே போன்று, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
இவர்களால் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்ய, மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூருக்கு நேற்று முன்தினம் வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, பிரச்னைகளை கேட்டறிய முடிவு செய்துள்ளார்.
முதல் நாளான நேற்று மதியம், பெங்களூரின் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்தார். கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களின் எட்டு எம்.எல்.ஏ.,க்களுடன், ஆலோசனை நடத்தினார். இவர்களிடம் தகவல் பெற, 20 கேள்விகளை தயார் செய்து கொண்டு வந்துள்ளார்.
'உங்கள் தொகுதிக்கு, அமைச்சர்கள் எத்தனை முறை வந்தனர், எந்தெந்த அமைச்சர்கள் வரவில்லை, உங்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த, சாய்க்காத அமைச்சர்கள் யார், யார், உங்கள் தொகுதிகளுக்கு எவ்வளவு நிதியுதவி வந்துள்ளது, எவ்வளவு செலவிட்டீர்கள், கிடைக்க வேண்டிய பாக்கி நிதியுதவி எவ்வளவு' என்பது உட்பட, பல தகவல்களை கேட்டறிந்தார்.
மேலும், 'உங்கள் தொகுதிகளில் எவ்வளவு பயனாளிகளுக்கு, வாக்குறுதி திட்டங்களின் பயன் கிடைத்துள்ளது, வாக்காளர்களுக்கு அரசு மீது உள்ள கருத்து என்ன, வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா, இது கட்சிக்கு அரசியல் ரீதியில் உதவியாக இருக்குமா, எம்.எல்.ஏ.,வான பின், உங்கள் தொகுதியில் என்ன திட்டங்களை செயல்படுத்தினீர்கள், மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்தியதில், உங்களின் பங்களிப்பு என்ன, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சிக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எப்படி உள்ளது' எனவும் கேட்டு, தகவல் தெரிந்து கொண்டார்.
சுர்ஜேவாலாவின் கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அமைச்சர்கள் மீது, புகார் பட்டியல் வாசித்தனர். தங்களை மதிப்பதில்லை. நாங்கள் சிபாரிசுகளை அனுப்பினால் கண்டு கொள்வதில்லை என, குமுறி கொந்தளித்தனர்.
தங்கவயல் எம்.எல்.ஏ., ரூப்கலா, பங்கார்பேட் எம்.எல்.ஏ., நாராயணசாமி உட்பட பலரும், 'கோலார் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உள்ளது. கட்சியை நாங்கள் தாயை போன்று பூஜிக்கிறோம். ஆனால் சிலர் தங்களின் சுயநலத்துக்காக, கட்சியை பாழாக்குகின்றனர். முன்னாள் அமைச்சர் ரமேஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷ்டி அரசியல் நடத்துகின்றனர். இதை சரி செய்வதில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அக்கறை காட்டவில்லை' என குற்றம்சாட்டினர்.
'நகர மேம்பாட்டு துறை அமைச்சர் பைரதி சுரேஷ், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார். எம்.எல்.ஏ.,க்களுடன், கலந்தாலோசிப்பது இல்லை. அரசு நியமனங்கள், நிதியுதவி வழங்குவது உட்பட எந்த விஷயத்திலும், எங்களின் கருத்துகளை கேட்பதில்லை' எனவும், குற்றஞ்சாட்டினர்.
குற்றச்சாட்டுகளை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட சுர்ஜேவாலா, 'உங்கள் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், கட்சி மேடையில் விவாதித்து சரி செய்து கொள்ளுங்கள். பகிரங்கமாக பேசி, கட்சி ஒழுங்கை மீறாதீர்கள்' என, கண்டித்துள்ளார்.
அதிருப்தியில் உள்ள பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே, இக்பால் ஹுசேன், நஞ்சேகவுடா, பேளூர் கோபால கிருஷ்ணா, சீனிவாஸ், பாலகிருஷ்ணா, சிவலிங்கேகவுடா உட்பட பலருடனும் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு, பெங்களூரு ரூரல், ராம்நகர், குடகு மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்களுடன், சுர்ஜேவாலா இன்று ஆலோசனை நடத்துவார். ஜூலை 3ம் தேதி, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூரு மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.