/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக மேல்சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ்...குறி!: பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்க திட்டம்
/
கர்நாடக மேல்சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ்...குறி!: பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்க திட்டம்
கர்நாடக மேல்சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ்...குறி!: பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்க திட்டம்
கர்நாடக மேல்சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ்...குறி!: பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்க திட்டம்
ADDED : அக் 11, 2025 05:08 AM

பெங்களூரு: கர்நாடக மேல்சபை தலைவர் பதவி கைப்பற்ற காங்கிரஸ் காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது. இதற்காக அப்பதவியில் உள்ள பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்கவும் அக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சுயேச்சைகள் உட்பட 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பதால், சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளை எளிதாக கைப்பற்ற முடிந்தது.
ஆட்சி அமைத்தபோது, ஆளுங்கட்சியாக இருந்தாலும், மேல்சபை தலைவர் பதவியை காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு மேல்சபையில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியின் பலம் அதிகமாக இருந்ததே காரணம்.
சுயேச்சை லகன் இந்நிலையில், காங்கிரசின் ஆரத்தி கிருஷ்ணா, சிவகுமார், ஜக்கப்பனவர், ரமேஷ் பாபு ஆகிய 4 பேர், கவர்னர் அனுமதியுடன், நியமன எம்.எல்.சி.,க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதன்மூலம் மேல்சபையில் காங்கிரஸ் பலம் அதிகரித்தது.
மொத்தம் 75 இடங்களை கொண்ட மேல்சபையில், காங்கிரஸ் பலம் தற்போது 37ஆக உள்ளது. பா.ஜ.,வுக்கு 29, ம.ஜ.த.,வுக்கு 7, சுயேச்சை ஒருவர், மேல்சபை தலைவர் ஒருவர் உள்ளனர். மேல்சபை தலைவரை கழித்து பார்த்தால், காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு தலா 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
மேல்சபையில் தங்கள் பலம் அதிகரித்திருப்பதால், அந்த சபையின் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில், வரும் டிசம்பர் மாதம் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும். அதற்குள் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பதவியில் இருக்கும், பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டியை நீக்கும் வழிகளை காங்கிரஸ் தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பதவிக்கு போட்டி தலைவர் பதவியை பிடிக்க 38 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், சுயேச்சை எம்.எல்.சி.,யான லகனிடம், காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர். லகன், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர் ஆவார்.
இதனால் சதீஷ் மூலம், லகன் மனதை கரைக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்காமல், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால், பசவராஜ் ஹொரட்டியின் பதவி தப்பும்.
ஒருவேளை லகன் தங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், பா.ஜ., - ம.ஜ.த.,வில் உள்ள சில உறுப்பினர்களின் ஆதரவை பெறவும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிடுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அதற்குள்ளாகவே மேல்சபை தலைவர் பதவிக்கு, காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. மூத்த எம்.எல்.சி.,க்கள் கோவிந்தராஜ், ஹரி பிரசாத், ரவி, சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் கோவிந்தராஜ், போசராஜு ஆகியோர், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள். ரவி, துணை முதல்வர் சிவகுமாரின் உறவினர். ஹரி பிரசாத் நடுநிலையான தலைவர். போசராஜு, ஹரிபிரசாத், சோனியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு தலைவர் பதவி கிடைப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது.
நண்பர்கள் நேர்மையான அரசியல்வாதி என்று பெயர் எடுத்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, உண்மையை நேர்பட பேச கூடியவர்.
இது பலருக்கும் பிடிக்கவில்லை. தன் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டால், பதவியை துாக்கி எறியவும் துணிந்தவர்.
முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, தன்னை 'ஹனிடிராப்' செய்ய முயன்றதாக கூறியது பற்றி, மேல்சபையில் விவாதம் நடத்த பசவராஜ் ஹொரட்டி அனுமதி மறுத்தார். இதனால் அவருக்கு எதிராக பா.ஜ., உறுப்பினர்கள் பேசினர்.
'சபையை ஒழுங்காக நடத்த தனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை' என கூறி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார்.
முதல்வர் சித்தராமையா, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கேட்டுக் கொண்டதை அடுத்து, தன் ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசவராஜ் ஹொரட்டியும், சித்தராமையாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் கவனிக்கத்தக் கது.