ADDED : ஜூன் 04, 2025 12:34 AM

மைசூரு : ''மங்களூரை காஷ்மீராக மாற்ற போகின்றனர். மங்களூரு கலவரத்துக்கு பின்னால் யார் இருக்கின்றனர். அவர்களின் பின்னணி என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., - சி.டி.ரவி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இறந்து விட்டது. ஆட்சி காலத்தில், மூன்று ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. மங்களூரு கலவரத்துக்கு பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
பிரவீன் நெட்டாரு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணமா. ஹிந்துக்கள் இருக்கும் இடத்தில் கலவரங்கள் நடக்கிறதா. நாட்டின் தெற்கு பகுதியில், மங்களூரை காஷ்மீராக மாற்ற போகின்றனர்.
உலகில் நடக்கும் அனைத்து மத கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., தான் காரணமா. பின்லேடனும், முஜாஹிதீன்களும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்தவர்களா. மங்களூரு கலவரத்துக்கு பின்னால் யார் இருக்கின்றனர். அவர்களின் பின்னணி என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
மாநில அரசு, மோசடிகளை அவர்களுக்கு விருதுகளாக கருதுகின்றனர். எங்களை 40 சதவீத கமிஷன் அரசு என்று குற்றம்சாட்டினர். இந்த அரசு, 69 சதவீதம் கமிஷன் வாங்குகிறது. எதிர்காலத்தில் இது 100 சதவீதமாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.