/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை!: மேலிட பொறுப்பாளர் பெங்களூரு வருகை
/
காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை!: மேலிட பொறுப்பாளர் பெங்களூரு வருகை
காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை!: மேலிட பொறுப்பாளர் பெங்களூரு வருகை
காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை!: மேலிட பொறுப்பாளர் பெங்களூரு வருகை
ADDED : ஜூன் 29, 2025 11:03 PM

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஐந்து வாக்குறுதி திட்டங்களால், தங்கள் தொகுதிக்கு அரசு நிதி ஒதுக்குவது இல்லை என்று, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கமாக பேச ஆரம்பித்து உள்ளனர்.
மூத்த எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் ஒருபடி மேலே சென்று, அமைச்சர்கள், மூத்த எம்.எல்.ஏ.,க்களை மதிப்பது இல்லை என்று கூறியதுடன், வீட்டுவசதி துறையில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் லஞ்சம் வாங்கப்படுவதாக கூறினார்.
இன்னொரு மூத்த எம்.எல்.ஏ., ராஜு காகே, தனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்காததால், பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த வாரம், இரண்டு நாள் பயணமாக டில்லி சென்ற சித்தராமையா, மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.
மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை அனுப்பி வைப்பதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பொது செயலர் வேணுகோபால் கூறி இருந்தனர்.
இதற்கிடையில், 'வரும் செப்டம்பரில் அரசியலில் புரட்சி நடக்கும்' என்று, மூத்த அமைச்சர் ராஜண்ணா புது குண்டு போட்டார். இந்த புரட்சி முதல்வர் பதவி தொடர்பானது என, எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இன்று மதியம் பெங்களூரு வருகிறார்.
குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தன்னை, மதியம் 1:30 மணிக்கு சந்திக்கும்படி பி.ஆர்.பாட்டீலுக்கும், மதியம் 2:00 மணிக்கு வரும்படி ராஜு காகேவுக்கும், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி இன்று மதியம் இரு எம்.எல்.ஏ.,க்களும், மேலிட பொறுப்பாளரை சந்தித்து தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து கூற உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்த உள்ள மேலிட பொறுப்பாளர், 'இனி அரசுக்கு எதிராக பேச வேண்டாம்' என்று எச்சரிக்கை விடுப்பார் என தெரிகிறது.
அதிகார திமிர்
பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே தவிர சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள், முதல்முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் என 30 பேரையும், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இன்று சந்திக்கிறார். அனைவரிடமும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொருக்கும் 10 நிமிடம் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.
மதியம் 3:00 மணி முதல் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்க உள்ளார். இந்த ஆலோசனையின் போது முதல்வர் பதவி குறித்து பேச கூடாது என்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கர்நாடகாவிற்கு அடிக்கடி வருவது இல்லை. முதல்வர், துணை முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் நினைத்ததை சாதித்து கொள்கின்றனர். மேலிட பொறுப்பாளர் வந்தால் தான் அவரிடம், எங்கள் பிரச்னையை கூற முடியும் என்று சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் இருந்தனர்.
தற்போது, மேலிட பொறுப்பாளர் வருவதால், அதிகார திமிரில் இருக்கும் அமைச்சர்கள் பற்றி போட்டு கொடுக்கவும், எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர்.
புதிது இல்லை
ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வருகை குறித்து, துணை முதல்வர் சிவகுமார் நேற்று கூறுகையில், ''மேலிட பொறுப்பாளர் பெங்களூரு வருகிறார். எம்.எல்.ஏ.,க்களை ஒவ்வொருவராக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
''இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, காங்கிரஸ் அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.,க்களிடம் அவர்கள் பிரச்னை குறித்து கேட்க உள்ளார்,'' என்றார்.
தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''மேலிட பொறுப்பாளர் இங்கு வருவது புதிது இல்லை. ஆனாலும், இது அவர் கட்டாயம் வர வேண்டிய நேரம். எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ள பிரச்னையை கேட்பதுடன், அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளார்,'' என்றார்.