/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு மீண்டும் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்?
/
பெங்., மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு மீண்டும் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்?
பெங்., மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு மீண்டும் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்?
பெங்., மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு மீண்டும் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்?
ADDED : ஜூன் 05, 2025 11:26 PM
பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி, தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளின் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனங்கள் வாயிலாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமித்துள்ளது. ஆண்டுதோறும் இவர்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
ஒப்பந்த ஆசிரியர்களில், 15 முதல் 20 சதவீதம் ஆசிரியர்களுக்கு சரியான கல்வித்தகுதி இல்லை. இவர்களால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடிவதில்லை.
இதனால் மாணவர்களின் கல்வித்திறன் குறைகிறது. தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், ஆண்டுதோறும் குறைகிறது. ஒப்பந்த ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதி பெற்றவர்கள் இல்லை என, அன்றைய மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியிருந்தார்.
எனினும், கடந்த ஆண்டு மே மாதம், செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் டிடெக்டிவ் ஏஜென்சிகள் வாயிலாக, ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
கல்வித்துறைக்கும், செக்யூரிட்டி, டிடெக்டிவ் ஏஜென்சிக்கும் என்ன சம்பந்தம்? இவற்றால் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க முடியுமா என, பலரும் காட்டமாக கேள்வி எழுப்பினர். அதன்பின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அப்போது துணை முதல்வர் சிவகுமார், 'இனி பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்' என, கூறியிருந்தார்.
ஒப்பந்த ஆசிரியர்களை நீக்கிவிட்டு, கல்வித்தகுதியுடன் கூடிய நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும்படி, கல்வி வல்லுநர்கள், மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். ஆனால் மாநகராட்சி இவ்விஷயத்தை தீவிரமாக கருதவில்லை.
இப்போதும் 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, சுற்றறிக்கை பிறப்பித்த தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், ஜூன் 16ம் தேதிக்குள், ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி கல்விப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கல்வித்துறை சார்பில், பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிக்கும்படி, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆனால் இது பற்றி, அரசு இதுவரை முடிவு செய்யவில்லை.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்விக்கு கல்விக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 2024 - 25ம் ஆண்டில் பணியாற்றிய ஒப்பந்த ஆசிரியர்கள், நடப்பாண்டு ஏப்ரலில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நடப்பாண்டுக்கு அவர்களே மீண்டும் ஒப்பந்த ஆசிரியர்களாக வரலாம். ஆசிரியர்கள் நியமனத்தில், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சியின் முடிவுக்கு கல்வி வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமக்கும் முடிவை கைவிட்டு, கல்வித்துறை சார்பில் நிரந்தரமாக ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிக்கும்படி மீண்டும் வலியுறுத்துகின்றனர்.