‘அப்ரூவர்’ பிரதோஷ் ராவுக்கு ஜாமின் நிபந்தனையுடன் 5 நாள் வழங்கியது நீதிமன்றம்
‘அப்ரூவர்’ பிரதோஷ் ராவுக்கு ஜாமின் நிபந்தனையுடன் 5 நாள் வழங்கியது நீதிமன்றம்
UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 06:54 PM

பெங்களூரு: நடிகர் தர்ஷன் வழக்கில் அப்ரூவராக மாறிய பிரதோஷ் ராவிற்கு, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் 5 நாட்களுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பிரதோஷ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வழக்கில், தர்ஷனுக்கு எதிராக, அரசு தரப்பு சாட்சியாக பிரதோஷ் ராவ் மாறினார். இவரின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரதோஷ் ராவின் தந்தை இறந்தார். அவருக்கு இரண்டாம் ஆண்டு திதி செலுத்த, பரோல் வழங்க வேண்டும் என்று 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதற்கு தர்ஷன் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஐந்து நாட்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிரதியை, விசாரணை நீதிமன்றத்தில் பிரதோஷ் தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு, நவ., 7 ம் தேதி (நேற்று) முதல் 5 நாட்களுக்கு தினமும் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை வீட்டுக்கு செல்லலாம். மாலை 6:00 மணிக்கு மீண்டும் சிறைக்கு திரும்பிவிட வேண்டும்.
இந்த காலகட்டத்தில் மனுதாரர், இவ்வழக்கு தொடர்பான நபர்களையோ, சாட்சிகளையோ, அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளக்கூடாது.
திதியில் பங்கேற்கும் புரோகிதர், சமையல் செய்பவர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் பற்றிய நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி இடைக்கால ஜாமின் வழங்கியது.
